நவராத்திரி விழாவுக்கு அனுமதிக்கப்படாத பெண்??

நவராத்திரி கொண்டாட்டத்தில் ஒரு பெண்ணை அவரது சமூகத்தினர் கலந்துக் கொள்ள தடை விதித்துள்ளனர்.

வட மாநிலங்களில் நவராத்திரி விழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அதுவும் குறிப்பாக குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் தாண்டியா என்னும் கோலாட்டம், கர்பா என்னும் கும்மி ஆகிய நடனங்கள் ஒவ்வொரு பகுதியிலும் நடப்பது வழக்கமாகும். இந்த விழாவை ஒவ்வொரு சமூகத்தினரும் சேர்ந்து விமரிசையாக கொண்டாடுவார்கள்.

மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் கஞ்சர்பட் என்னும் சமூகத்தினர் வசித்து வருகின்றனர். அந்த சமூகத்தில் ஒரு விசித்திர வழக்கம் உள்ளது. அந்த சமூகப் பெண்கள் திருமணத்துக்கு முன்பு கன்னித்தன்மை பரிசோதனை செய்துக் கொள்வது அவசியம் ஆகும். இந்த வருட ஆரம்பத்தில் ஒரு பெண்ணுக்கு திருமணம் நிச்சயம் ஆனது. ஆனால் அந்த பெண் இவ்வாறு பரிசோதனைக்கு உட்பட மறுத்து உள்ளார்.

கன்னித்தன்மை பரிசோதனைக்கு உட்படுத்துவது தன்னை அவமானப் படுத்தும் செயல் என அவர் கூறி உள்ளார். அதற்கு அந்த சமூகத்தினர் ஒப்புக் கொள்ளாததால் சமூகத்தினரை மீறி அவர் மே மாதம் காவல்துறையினர் பாதுகாப்புடன் திருமணம் செய்துக் கொண்டார். அது முதல் அந்தப் பெண்ணிடம் அவருடைய சமூகத்தினர் பேசுவதை தவிர்த்துள்ளனர்.

இந்த வருட நவராத்திரி விழாவில் திருமணமான அந்தப் பெண் கலந்துக் கொண்டு கோலாட்டம் ஆடி உள்ளார். திடீரென அந்த விழாவில் சங்கீதம் நிறுத்தப்பட்டது. அந்தப் பெண் கலந்துக் கொண்டதால்தான் கொண்டாட்டம் நிறுத்தப்பட்டது என அவர் தாய் தெரிவித்துள்ளார்.

அந்த சமயத்தில் மைக் மூலமாக விழாக் கொண்டாட்டம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்தப் பெண் அங்கிருந்து வெளியேறியதும் மீண்டும் விழா தொடங்கப் பட்டுள்ளது. இது குறித்து அந்தப் பெண் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.