பெங்களூர் ஞானபாரதியில் செயல்பட்டு வரும், இந்திய விளையாட்டு ஆணையத்தில் கபடி பயிற்சியாளராக பணியாற்றி வந்தவர் ருத்ரப்பா வி.ஒசமணி (வயது 59) . இவர் கடந்த 9-ந் தேதி பெண்கள் உடை மாற்றும் அறையில் அத்துமீறி நுழைந்து, 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறினார். மேலும், இந்திய விளையாட்டு ஆணையத்திலும் சம்பவம் குறித்து புகார் செய்யப்பட்டது.
இந்த புகாரை தொடர்ந்து இந்திய விளையாட்டு ஆணையம் சார்பில் பயிற்சியாளர் ருத்ரப்பா வி.ஒசமணி மீதான புகாரை விசாரிக்க தனிக்குழு அமைக்கப்பட்டது. இந்த தனிக்குழு நடத்திய விசாரணையின் முடிவில் ருத்ரப்பா வி.ஒசமணி பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும், ஞானபாரதி போலீசில், அவர் மீது பதிவுசெய்யப்ட்ட புகாரின் பேரில் போலீசார் அவர் மீது ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதையடுத்து வீட்டை விட்டு வெளியேறிய ருத்ரப்பா வி.ஒசமணி தேவநகரி ஹரிஹர் நகரில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினார். நாள் முழுவதும் அறையில் இருந்து வெளியே வராததால் சந்தேகம் அடைந்த ஓட்டல் ஊழியர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அவர் பிணமாக தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பது தெரியவந்தது. அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அந்த அறையில் இருந்த கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர். அதில் தனது மனைவி ரேணுகாவுக்கும் மகன் ராகேஷூக்கும் எழுதியுள்ளார். ‘அதிகம் பாதிக்கப்பட்டு விட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள். இதுதான் காரணம்’ என்று கூறியுள்ளார். மகனுக்கு என்று குறிப்பிட்டு, ‘அம்மாவை பார்த்துக்கொள். எனது உடலை தானமாக கொடுத்துவிடுங்கள்’ என்று தெரிவித் துள்ளார். இதையடுத்து அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுபற்றி போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.