கைது உறுதி: 3 நாட்டு மக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த டிரம்ப்!

சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்தால் கைது உறுதி என ஹோண்டுராஸ், கவுதமாலா, எல்சல்வடார் ஆகிய நாட்டவர்களுக்கு ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஹோண்டுராசை சேர்ந்த 1,600 பேர் கவுதமாலா வழியாக சட்ட விரோதமாக அமெரிக்காவில் நுழைய எல்லையில் காத்திருக்கின்றனர்.

இது தொடர்பான தகவல் ஜனாதிபதி டிரம்புக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து ஹோண்டுராஸ், கவுதமாலா, எல்சல்வடார் நாடுகளுக்கு அவர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் தனது டிவிட்டர் பதிவில், ‘அமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழைபவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்படுவார்கள். அவர்கள் சொந்த நாட்டுக்கு நாடு கடத்தப்படுவார்கள்’ என்று கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், `ஹோண்டுராஸ், கவுதமாலா, எல்சல்வடார் நாட்டு அரசுகள், தங்கள் நாடுகளின் எல்லை வழியாக யாரையாவது அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதித்தால், அந்த நாடுகளுக்கு அமெரிக்கா வழங்கும் நிதியுதவி நிறுத்தப்படும்’ என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டில் கவுதமாலாவுக்கு அமெரிக்கா 248 மில்லியன் டொலர், ஹோண்டுராசுக்கு 175 மில்லியன் டொலர், எல்சல்வடாருக்கு 115 மில்லியன் டொலர்களை நிதியுதவியாக அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.