சபரிமலை…. போலீஸ் தடியடி!. பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு!

கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபடலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் சபரிமலைக்கு செல்வதை அனுமதிக்கமாட்டோம் என போராட்டம் வெடித்தது.

சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவிற்கு எதிராக போராட்டம் செய்தவர்கள் மீது போலீசார் மோசமாக தடியடி நடத்தி இருக்கிறார்கள். பெண் பக்தர்களையும் செய்தியாளர்களையும் செல்ல விடாமல் தொடர்ந்து வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் மோதல் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது போலீஸ் வாகனங்கள் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் சரமாரி கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

அப்போது போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். போலீஸ் தடியடியால் நிலக்கல் போர்க்களமாகியுள்ளது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் நிலக்கல்லில் பாதுகாப்பு அளிக்க 100 பெண் போலீசார் உள்பட மேலும் 500 போலீசார் குவிக்கப்பட்டனர்.

சபரிமலை சுற்று வட்டாரப்பகுதியான இலவங்கல், நிலக்கல், பம்பை, சன்னிதானம் ஆகிய பகுதிகளில் 22-ந் தேதி வரை 144- தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், சபரிமலையின் 30 கி.மீ. சுற்றளவு பகுதியில் எந்த ஒரு போராட்டம் நடத்தவும் போலீசார் தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர்.