பாலியல் அத்துமீறல்களை அம்பலப்படுத்தும் மீ டூ இயக்கம், பல்வேறு துறைகளில் புயலை கிளப்பியுள்ளது. பிரபல துறைகளில் இருக்கும் ஆண்களால் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களை பெண்கள் இந்த மீடூ ஹேஸ்டேக் மூலம் உலகத்துக்கு கொண்டுவந்தனர்.
தமிழகத்தில், சிலர் தங்களுக்கு நேர்ந்த துயரங்களையும், பலர் இவர்களுடன் பகிர்ந்துகொண்ட தகவல்களையும் சமூக ஊடகங்களில் வெளியிட்டு பரபரப்பை கிளப்பினர்.
இதில், பாடலாசிரியர் வைரமுத்து தம்மை படுக்கைக்கு அழைத்தார் எனவும், இளம்பெண் ஒருவருக்கு ஆபாச கவிதையை தொலைபேசியில் கூறியுள்ளார் எனவும் குற்றசாட்டுகள் குவிந்து தமிழாக்கி மக்களை அதிர்ச்சியடையவைத்தது.
இந்த நிலையில் பெண் கவிஞரும், இயக்குனருமான லீனா மணிமேகலை, இயக்குனர் சுசி கணேசன் மீது பாலியல் புகார் கூறியுள்ளார். அவர் மீடூ ஹேஸ்டேக்கில் கூறுகையில் காரில் ஒன்றாக சென்றபோது, சுசி கணேசன் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக கூறியுள்ளார்.
லீனா மணிமேகலை கூறியதை மறுத்துள்ள சுசி கணேசன், தன் மீது எந்த தவறும் இல்லை என்பதை நிரூபிக்க தான் தயாராக இருக்கிறேன். இது எனக்கு அவமானமாக உள்ளது. கண்டிப்பாக நான் குற்றமற்றவர் என்று நிரூபிப்பேன்.
தன் மீது எந்த தவறும் இல்லை எனவும் அதனை நீதிமன்றம் வரை கொண்டு சென்று நிரூபிக்க தயார் எனவும் தெரிவித்த சுசி கணேசன், அவ்வாறு தான் குற்றம் செய்ததாக நிரூபிக்கப்பட்டால் அந்த இடத்திலேயே தூக்கில் தொங்குவேன் என தெரிவித்துள்ளார்.