15 பேர் கொண்ட சித்ரவதை குழு… 7 நிமிடத்தில் சிதைக்கப்பட்ட கொடூரம்: பத்திரிகையாளரின் கடைசி நிமிடங்கள்

சவுதி அரேபியாவின் 15 பேர் கொண்ட சித்ரவதை குழுவே அமெரிக்க பத்திரிகையாளர் ஜமாலை 7 நிமிடங்களில் கொடூரமாக கொலை செய்திருக்கலாம் என துருக்கி அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

பத்திரிகையாளர் ஜமால் மாயமானதாக துருக்கியில் உள்ள சவுதி தூதரகம் வெளியிட்டுள்ள தகவலின் பின்னணியில் மிகப்பெரும் சதியிருப்பதாக அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

தூதரக அலுவலகத்தினுள் சென்ற ஜமாலை, சவுதி சிறப்பு அதிகாரிகள் சிலர் கொடூரமாக சித்ரவதை செய்து கொலை செய்துள்ளனர் என்று துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், துருக்கி ஊடகங்கள் சில ஜமால் சித்ரவதை செய்து கொல்லப்பட்டதற்கான ஓடியோ ஆதாரத்தையும் வெளியிட்டன. ஜமால் 7 நிமிடங்கள் கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

இதனிடையே துருக்கி அரசு பத்திரிகையான யேனி சபாக், “எங்களுக்குக் கிடைத்துள்ள ஓடியோ ஆதாரங்கள்படி, சவுதி அரேபியா தூதரகத்தில் ஜமாலின் விரல்கள் துண்டிக்கப்பட்டுள்ளது.

அவர் சித்ரவதை செய்யப்பட்டுள்ளார். இறுதியாக அவரின் தலை துண்டிக்கப்பட்டுள்ளது. அருகில் இருந்த காட்டில் அவரின் உடல் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று செய்தி வெளியிட்டது.

மேலும், ஜமால் தூதரக அலுவலகத்துக்கு வந்த அன்று சவுதியில் இருந்து 15 பேர் வெவ்வேறு தனியார் விமானங்களில் துருக்கிக்கு வந்துள்ளனர்.

அன்றைய தினமே அவர்கள் மீண்டும் சவுதிக்குச் சென்றுவிட்டனர். அவர்களின் பெயர்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகத் துருக்கி அறிவித்துள்ளது. இறுதிவரை அவருக்கு என்ன நேர்ந்தது என்பது புரியாத புதிராகவே உள்ளது.

யார் இந்த ஜமால் கசோகி?

சவுதியைச் சேர்ந்த ஜமால் பத்திரிகை சாம்ராஜ்ஜியத்தில் கொடிகட்டிப் பறந்தவர். சவுதியில் உள்ள செய்தி நிறுவனங்களுக்கு அதிமுக்கிய செய்திகளைக் கொடுத்தவர். பல்வேறு சவுதி செய்தி நிறுவனங்களுக்காக ஆப்கானிஸ்தானில் சோவியத் படையெடுப்பு செய்தது, ஒசாமா பின்லேடனின் எழுச்சி போன்ற செய்திகளை சவுதி மக்களுக்கு கொண்டு சேர்த்தது ஜமால்தான்.

ஆரம்பத்தில் சவுதி அரசு பற்றி நேர்மறை செய்திகளை எழுதி வந்த ஜமால், சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் கைக்கு ஆட்சி சென்றதும், தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார்.

சவுதியில் அவருக்கு மிரட்டல்கள் வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து 2017-ம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறினார். அமெரிக்காவில் பிரபல பத்திரிகையான வாஷிங்டன் போஸ்ட் நிறுவனத்தில் இணைந்தார்.

தொடர்ந்து சவுதி அரசை விமர்சித்து எழுதத் தொடங்கினார். குறிப்பாகச் சவுதியின் இளவரசர் முகமது பின் சல்மானை கடுமையாக விமர்சித்து எழுதி வந்துள்ளார்.

சம்பவத்தன்று, அக்டோபர் 2-ம் திகதி துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்துக்கு மதியம் 1 மணியளவில் சென்றார்.

அவருடன் அவரின் காதலி ஹெயிஸும் சென்றிருந்தார். உள்ளே மொபைல் போன்கள் எடுத்துச் செல்லக்கூடாது. `என் மொபைல் போன்களை நீ பத்திரமாக வைத்துக்கொள். நான் ஒரு வேளைத் திரும்பி வரவில்லை என்றால் துருக்கி பிரதமரின் ஆலோசகருக்குத் தகவல் கொடு’ என்று கூறிவிட்டு தூதரக அலுவலகத்தினுள் சென்றார்.

உள்ளே சென்று 10 மணி நேரம் ஆகியும் அவர் வெளியே வரவில்லை. தூதரகத்தில் வெளியே தவிப்புடன் ஹெயிஸ் காத்துக்கொண்டிருந்தார். கடைசி வரை ஜமால் வெளியே வரவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது.