பாரதிராஜா பொதுவெளியில் கூறும் கருத்துகள் அநேகமாகச் சர்ச்சைக்குரியனவாகுவதுண்டு.இலங்கைப் பயணங்களின்போதும் இப்படி வாயைக் கொடுத்து வாங்கியிருக்கிறார். விடுதலைப்புலிகளின் காலத்தில் வன்னிக்கு வந்திருந்த பாரதிராஜாவிடம் போராளிகள் உள்பட வேறு சிலரும் சில கேள்விகளை எழுப்பியிருந்தனர்.
பாரதிராஜாவின் வருகை எந்தப் பெறுமதிகளையும் வன்னிக்குக் கொடுக்கவில்லை. வன்னிக்கு மட்டுமல்ல, ஈழத்தமிழருக்கே கொடுக்கவில்லை என்றே சொல்ல வேணும். பாரதிராஜா கிளிநொச்சியில் திரைத்துறையில் ஈடுபட்டவர்களையும் கலைஞர்களையும் சந்தித்தார். கிளிநொச்சி திருநகரில்தான் சந்திப்பு நடந்தது. அப்பொழுது, “மணிரத்தினத்தின் “கன்னத்தில் முத்தமிட்டால்” படத்தையும் கமல்ஹாசனின் “தெனாலி”யையும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவை இரண்டும் ஈழத்தமிழரின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துகின்றன. ஈழ அரசியலும் ஈழ நிலவரமும் தெரியாமல் எடுக்கப்பட்ட படங்கள். இதைப்பற்றி உங்களுடைய நிலைப்பாடென்ன?” என்று ஒரு கேள்வியை எழுப்பினார் போராளிக்கலைஞர் ஒருவர்.
மடியிலேயே ஷெல் விழுந்து வெடித்தமாதிரி இருந்தது பாரதிராஜாவுக்கு. ஆனால், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், சத்தமில்லாமல் அசட்டுத்தனமாகச் சிரித்துக் கொண்டிருந்தார் இரண்டு நிமிசத்துக்கும் மேல். பிறகு சொன்னார், “கமலும் மணியும் என்னுடைய நண்பர்கள். அவர்கள் நல்லவர்கள்” என்று. “நல்லவர்கள் இப்படிச் செய்யலாமா?” என்று எழுந்தது மறு கேள்வி. கையில் கட்டியிருந்த மணிக்கூட்டில் நேரத்தைப் பார்த்தார் இயக்குநர் சிகரம். நிலைமையைப் புரிந்து கொண்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் “இத்துடன் நிகழ்ச்சியை முடிக்கப்போகிறோம். இயக்குநர் வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டியுள்ளது“ என்று மணிரத்தினத்தையும் கமலையும் பாதுகாத்த பாரதிராஜாவைப் பக்குவமாகக் காப்பாற்றிச் சென்றனர்.
ஆனால், எல்லோரும் தமிழ்நாட்டுக்குப் போன பிறகு வன்னிக்குப் போனோம். (ஏதோ தங்களின் செலவில், சுய முயற்சியில் போனதைப்போல) அங்கே புலிகளைச் சந்தித்தோம், பிரபாகரனைக் கண்டோம், பேசினோம் என்றெல்லாம் பேட்டி கொடுத்தனர். சிலர் வாரப்பத்திரிகைகளில் விறுவிறுப்பான தொடரே எழுதிக் காசு சம்பாதித்தனர். கூடவே பிரபாகரனோடும் புலிகளோடும் நின்ற படங்களையும் பிரசுரித்துப் புகழுயரத்தினர். இவர்களெல்லாம் புலிகளையும் பிரபாகரனையும் சந்தித்து பத்து ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. இந்தப் பத்தாண்டு காலத்தில் ஒரு படத்தையாவது ஈழப்பிரச்சினையை வைத்து உருப்படியாக எடுத்தார்களா? அல்லது ஈழச்சினிமா முயற்சிகளுக்கும் பிற கலைத்துறை மேம்பாட்டுக்கும் எப்போதாவது உதவியிருக்கிறார்களா?”
– இப்பொழுது மீண்டும் இலங்கைக்கு வந்த பாரதிராஜா வடக்குக் கிழக்குப் பகுதிகளில் பல இடங்களுக்கும் சிலரால் அழைத்துச் செல்லப்படுகிறார். பாரதிராஜாவை அழைத்துச் செல்வோருக்கு சில தேவைகளிருக்கலாம். ஆனால், அவர்கள் பாரதிராஜாவை சமூகப் பெறுமதியாக மாற்ற முற்படுவதே கேள்விக்குரியது.
நன்றி:
தயானந்தா.