பிரித்தானியாவில் பேறுகாலம் நெருங்கிய மனைவியை அழைத்துக் கொண்டு அதிவேகத்தில் வாகனம் ஓட்டிய சாரதிக்கு அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் லூயிஸ் பேக்கர் என்பவர் பேறுகாலம் நிரம்பிய தமது மனைவியை அழைத்துக் கொண்டு M5 சாலை வழியாக தமது காரில் வொர்செஸ்டர்ஷைர் ராயல் மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்.
மனைவியின் அப்போதைய நிலை கருதி லூயிஸ் மணிக்கு சுமார் 101கி.மீ வேகத்தில் தமது காரை செலுத்தியுள்ளார்.
இது கண்காணிப்பு கமெராவில் பதிந்துள்ளதுடன், லூயிஸ் பெயரில் வழக்கும் தொடரப்பட்டது.
ஆனால் குறித்த நேரத்தில் தனது மனைவியை மருத்துவமனையில் சேர்ப்பித்ததால், அதிக சிக்கல் ஏதுமின்றி லூயிஸின் மனைவி லாரா அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
இந்த விவகாரம் தொடர்பில் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த லூயிசுக்கு பொதுமக்கள் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
ஆனாலும் Kidderminster நீதிமன்றம் லூயிசின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளதுடன், 390 பவுண்டுகள் அபராதமும், அவரது வாகன உரிமத்தின் மீது 5 புள்ளிகளும் பதிவு செய்துள்ளது.
சம்பவம் நடந்த அன்று லாரா 36 வார கர்ப்பிணியாக இருந்துள்ளார். அவரது வயிற்றில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சி தடைபட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரியவந்துள்ளது.
அதற்கான மருந்துகளை உடனடியாக எடுத்துக் கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே பேறுகாலமும் நெருங்கியுள்ளது.
உரிய நேரத்தில் லாராவை மருத்துவமனையில் சேர்ப்பிக்க தவறினால் அது சிக்கலில் கொண்டுவிடும் என உணர்ந்த லூயிஸ் ஆம்புலன்ஸ் வருகைக்கு காத்திராமல், தனது காரிலேயே மனைவியை மருத்துவமனை அழைத்துச் சென்றுள்ளார்.
குடியிருப்பில் இருந்து மருத்துவமனை செல்லும் தூரத்தில் பெரும்பாலும் 70 கி.மீ வேகத்திலேயே லூயிஸ் தமது வாகனத்தை செலுத்தியுள்ளார்.
இருப்பினும் தனது மனைவியை மருத்துவமனை சேர்ப்பிக்க வேண்டும் என்ற அவசரத்தில் 100 கி.மீ வேகத்தை தாண்டியுள்ளார்.