ஒரு வாரம் மகள் சடலத்துடன் இருந்த தாயார்..??

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் இறந்த மகள் உடலுடன் ஒரு வாரம் தாய் இருந்த சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியை சேர்ந்த சபிதா(21) என்பவர் நேற்று காலை அழுகிய நிலையில் வீட்டில் இறந்து கிடந்தார். உடலை முத்தையாபுரம் பொலிசார் கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் சபிதா இறந்தது தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. சபிதாவின் தந்தை ராஜமணி உடல்நிலை குறைவால் கடந்த 8 ஆண்டுக்கு முன் இறந்துவிட்டார்.

பட்டதாரியான மகள் சபிதாவுடன் பத்மாவதி வசித்து வந்தார். கணவர் இறந்த வேதனையில் இருந்த அவர் மனநிலை பாதிக்கப்பட்டது.

அவ்வப்போது மருத்துவமனையில் காட்டி சிகிச்சை அளித்தபோதும் பத்மாவதி குணமடையவில்லை. அக்கம்பக்கத்தினரை எப்போதும் திட்டிக்கொண்டிருப்பாராம்.

இது மகள் சபிதாவிற்கு வருத்தத்தை தந்தது. தந்தையும் இறந்து விட்டார். தாய் நிலையும் சரியில்லை என்று அங்குள்ளவர்களிடம் சொல்லி வேதனைப்பட்டுள்ளார்.

இதற்கிடையில் இவர்கள் நிலையை அறிந்த உறவினர்கள் இவர்கள் வீட்டை அபகரிக்க திட்டமிட்டதாக தெரிகிறது.

இது சபிதாவிற்கு தெரியவந்ததும் தாயிடம் கூறியிருக்கிறார். நம்மை விட்டு அப்பாவும் போய்விட்டார். உன் நிலைமையும் இப்படி ஆகிவிட்டது. வீட்டையும் பிடுங்க பார்க்கிறார்கள். இந்த நரக வேதனையை எத்தனை நாட்கள்தான் தாங்குவது.

இனி நான் இருக்கமாட்டேன் என்று தாயின் கைகளை பிடித்து 10 நாட்களுக்கு முன் கதறியிருக்கிறார். சபிதா கதறி அழுதது வெளியில் உள்ளவர்களுக்கும் கேட்டுள்ளது.

கடும் மள உளைச்சலுக்கு ஆளான சபிதா விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் மகள் இறந்த தகவலை வெளியே சென்று சொல்லும் அளவுக்கு தாயாரின் மன நிலை சரியில்லை என்பதால் அவர் மகளின் சடலத்துடனே இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.