சதி வலைகளை உருவாக்கினர்! அனைவருக்கும் நன்றி: சின்மயியின் உருக்கமான பதிவு

காயம்பட்ட இதயங்கள் குணமாக நான் துணை நிற்கிறேன் என மீ டூ மூலம் புகார் தெரிவித்தவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பாடகி சின்மயி தனது ட்விட்டரில் நீண்ட பதிவை பகிர்ந்திருக்கிறார்.

கடந்த வாரம் முழுவதும் என்னை சில கேள்விகள் துளைத்து எடுத்தன. அதிகாரத்தில் இருப்பவர்கள், சமூக வெளிச்சத்தில் இருப்பவர்கள், கேமராவின் முன்னால், கேமராவின் பின்னால் என பல வழிகளிலும் கேள்விகள் வந்தன.

ஏன் அப்பவே சொல்லாமல் இப்போது சொல்கிறாய்? மற்ற பெண்களின் கதைகளை நீ எப்படி நம்ப முடியும்? உன்னுடைய கதையை மட்டும் இங்கே சொல் என்றெல்லாம் விமர்சனங்கள் வந்தன.

என்னை வேசி என்று ஏசினர். எனது சாதியை சுட்டிக்காட்டியும், எந்த சித்தாந்தம் மீது நான் ஈர்ப்பு கொண்டுள்ளேன் என்பது குறித்தும் பேசினர்.

அதன் அடிப்படையில் சதி வலைகளையும் உருவாக்கினர். தமிழகத்திலா இப்படி எனத் தோன்றியது. என்னைப் போல் பாதிக்கப்பட்ட பெண்கள் யாரேனும் இப்படி சாதி சாயம் பூசப்பட்ட சதிக்குள்ளாக்கப்பட்டார்களா என்பது தெரியவில்லை.

ஆண்டாண்டு காலமாக பெண் என்பவள் பிறந்த வீட்டிலிருந்து புகுந்து வீட்டுக்கு அனுப்பப்படும் பொட்டலமாகத் தான் இருந்து வந்துள்ளால். அதுவரை அவள் மவுனியாக, தூய்மையாக இருக்க வேண்டும். கேள்வி கேட்கவே கூடாது. மீ டூ புகார்கள் சமூக வலைதளங்களில் உச்சத்தில் இருக்கலாம். ஆனால், யதார்த்தில் பெண்களின் வாழ்க்கை குரலற்றுதான் இருக்கிறது.

பெண்கள், ஆண்கள், மூன்றாம் பாலினத்தவர் என தங்களது துயரக்கதைகளைப் பகிர்ந்த அனைவரையும் நான் நம்புகிறேன். நான் மட்டுமல்ல என்னைப் போன்ற மனிதர்கள் அனைவரும் உங்களை நம்புவார்கள்.

30 வருடங்களுக்குப் பிறகு நீங்கள் உங்கள் கதையை சொல்லியிருக்கலாம். ஆனால், இப்போதாவது குரல் கிடைத்திருக்கிறதே. என் மீது நம்பிக்கை கொண்டு தங்கள் கதைகளைப் பகிர்ந்தவர்களுக்கு நன்றி.

இப்போது நீங்கள் நிம்மதியடைந்திருப்பீர்கள் என நான் நம்புகிறேன். நீங்கள் துன்பப்பட்டபோது உங்களுக்கு துணை நிற்காத குடும்பம், சமூகத்தை எண்ணி வேதனைப்படுகிறேன். அதை நான் இப்போது மாற்ற முடியாது.

ஆனால் ஒன்று மட்டும் உறுதியாக சொல்ல முடியும். ஏதோ ஒரு மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. இனி எல்லோரும் செவி கொடுக்காவிட்டாலும் யாரேனும் சிலராவது உங்களை அவமானப்படுத்தாமல் உங்கள் குரலைக் கேட்பார்கள்.

துன்புறுத்தலில் ஈடுபட்டவரை சகித்துக் கொண்டு ஏன் உங்கள் பணியை செய்தீர்கள் எனக் கேட்காமல் இருப்பார்கள் என்று நம்பிக்கையுடன் புண்பட்ட இதயத்தை குணமாக்கும் முயற்சியில் உள்ள அனைவருக்கும் துணை நிற்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.