இந்தியாவின் கேரள மாநிலத்தில் 3 பிள்ளைகளும் ஆற்றில் மூழ்கி இறந்தது தெரியாமல் உறவினர்களின் அவசர அழைப்பை ஏற்று வெளிநாட்டில் பணிபுரியும் தந்தை நாடு திரும்பியுள்ளார்.
கேரளாவின் செறுவத்தூர் பகுதி மொய்தீன் மற்றும் கதீஜா தம்பதிகளே, திருமணம் முடிந்து நீண்ட 10 ஆண்டுகளுக்கு பின்னர் பிறந்த பிள்ளைகள் மூவரை ஆற்றுப் பெருவெள்ளத்தில் தொலைத்தவர்கள்.
ஐக்கிய அமீரகத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் மொய்தீன், சொந்த மக்கள் மூவரும் இறந்த கதை தெரியாமல் உறவினர்களின் அவசர அழைப்பை ஏற்று நேற்று நாடு திரும்பியுள்ளார்.
மொய்தீன் மற்றும் கதீஜா தம்பதிகளுக்கு ஷாகீர்(20), ஜுமானா(14) மற்றும் ஜாஸிம்(12) என மூன்று பிள்ளைகள்.
அவசர சிகிச்சையில் மனைவி உள்ளார் என உறவினர்கள் தொலைபேசி மூலம் மொய்தீனிடம் தெரிவித்ததை அடுத்தே அவர் நாடு திரும்பியுள்ளார்.
வீட்டுக்கு வந்ததும் தமது பிள்ளைகள் தொடர்பில் விசாரித்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
பாடசாலை விடுமுறையை அடுத்து உம்மத்தூர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளனர் கதீஜாவும் அவரது மூன்று பிள்ளைகளும்.
இந்த நிலையில் அருகாமையில் உள்ள ஆற்றில் மூவரும் குளிக்க சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மழைக்காலம் என்பதால் அந்த ஆற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதில் சிக்கிய மூவரும் மரணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஷாகிர் மற்றும் ஜுமானாவின் சடலங்கள் மாலை நேரம் அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டது. இரவு வெகுநேரம் வரை தேடிய நிலையில் ஜாஸிமின் சடலமும் மீட்கப்பட்டது.
இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.