அசாம் மாநிலம் துலியாஜன் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தேராஷ் கோவல்லா. ஆளுங்கட்சியான பாஜகவைச் சேர்ந்த இவர் திடீரென தன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். முதலமைச்சர் சர்பானந்த சோனாவலுக்கு ராஜினாமா கடிதம் அனுப்பி இருக்கிறார். பாஜக மூத்த நிர்வாகியும் இதனை உறுதி செய்திருக்கிறார்.
முதல் முறை எம்எல்ஏவான தேராஷ் கோவல்லாவிடம் ராஜினாமா செய்ததற்கான காரணம் பற்றி கேட்டபோது, “பல பிரச்சனைகள் இருக்கின்றன. எம்எல்ஏவாக என் கடமைகளை முழுமையாக நிறைவேற்ற இயலவில்லை. அதனால் இதற்கு பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்றார்.
‘அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் அசாம் கேஸ் கம்பெனி லிமிடெட் எனது தொகுதியில் இருக்கிறது. அந்த கம்பெனியில் சமீபத்தில் முக்கிய பதவிகள் நிரப்பப்பட்டபோது, எனக்கு எந்த பதவியும் அளிக்கவில்லை. என்னிடம் எந்த ஆலோசனையும் செய்யாமல் அந்த கம்பெனியின் பதவிகள் நிரப்பப்பட்டன. என்னிடம் கலந்து ஆலோசனை செய்திருக்க வேண்டும்’ என்றும் கோவல்லா தெரிவித்தார்.
கட்சி கேட்டுக்கொண்டால் ராஜினாமாவை திரும்ப பெற வாய்ப்பு இருக்கிறதா? என்று செய்தியாளர்கள் கேட்டபோது, ‘பிரச்சனைகள் குறித்து முதலமைச்சருக்கு தெரிவித்துள்ளேன். அவரிடம் இருந்து திருப்தி அளிக்கும் வகையில் பதில் வந்தால், எனது ராஜினாமா முடிவை திரும்ப பெறுவது குறித்து பரிசீலனை செய்வேன்’ என்றார்.