அறிமுகமற்ற வாலிபனால் காதலித்து ஏமாற்றப்பட்ட யுவதியொருவரின் முறைப்பாட்டால் இளவாலை பொலிசார் தலையை சொறிந்து கொண்டிருக்கிறார்கள். யுவதியின் வாக்குமூலத்திலிருந்து காதலனை அடையாளம் காண முடியாத நெருக்கடி பொலிசாருக்கு ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு சாந்தை பகுதியை சேர்ந்த யுவதியொருவருடன் ஐந்து நாள் உல்லாசமாக இருந்து விட்டு, தலைமறைவான வாலிபனையே அடையாளம் காண முடியாமல் பொலிசார் திண்டாடுகிறார்கள்.
சாந்தை பிரதேசத்தை சேர்ந்த 19 வயதான யுவதியொருவர் அண்மையில் வீட்டிற்கு அருகிலிருந்த வர்த்தக நிலையமொன்றிற்கு சென்று வந்திருக்கிறார். வர்த்தக நிலையத்திற்கு சென்று வருவதற்குள் வீதியில் வாலிபர் ஒருவருடன் அறிமுகமாகி, தொலைபேசி இலக்கத்தை வழங்கியுள்ளார்.
அடுத்த சில நாட்கள் இருவரும் தொலைபேசியில் பேசி, காதல் வசப்பட்ட நிலையில், வீட்டைவிட்டு புறப்பட்டு காதலனுடன் சென்றுவிட்டார். மகளை காணாத பெற்றோர், இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தனர்.
வீட்டைவிட்டு புறப்பட்டு வந்த யுவதியை இன்னொரு இடத்திற்கு அழைத்து சென்று, தாம்பத்தியம் நடத்தியுள்ளார் அந்த வாலிபர். ஓரிரு நாளின் பின்னர், தமது வீட்டிற்கே திரும்பி சென்று, பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து வாழ்க்கை நடத்தலாமென யுவதி நச்சரித்திருக்கிறார். இதையடுத்து, யுவதி வீட்டை விட்டு புறப்பட்ட ஐந்தாம் நாள், திரும்பி வீட்டுக்கு வருவதாக தம்பதிகள் புறப்பட்டு வந்துள்ளனர்.
அப்போது, யுவதியின் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை தான் அணிந்து வரப் போவதாக, புதுமாப்பிள்ளை கேட்டிருக்கிறார். யுவதியும் அதை கொடுத்தார்.
யுவதியின் வீட்டிற்கு அருகில்- மோட்டார்சைக்கிளில் ஏற்றிய இடத்தில்- இறக்கி விட்டுவிட்டு, அந்த இடத்திலேயே நிற்கும்படியும், சில பொருட்களை அருகிலுள்ள கடையில் வாங்கி வருவதாகவும் கூறி வாலிபர் சென்றிருக்கிறார். நீண்டநேரம் காத்திருந்தும், காதலன் திரும்பி வராததையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை அந்த யுவதி அறிந்துள்ளார்.
பின்னர் தனியே வீட்டுக்கு சென்றார்.
யுவதியை ஏமாற்றியது, தங்கச்சங்கிலியை திருடியது தொடர்பில் தற்போது இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
எனினும், ஐந்து நாள் தாம்பத்தியம் நடத்திய காதலனின் முழுமையான பெயர், விபரம், தங்கியிருந்த இடம் எதுவும் யுவதிக்கு தெரியவில்லை. யுவதியை ஏமாற்றியவனின் தொலைபேசி துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த விசித்திர முறைப்பாட்டால் இளவாலை பொலிசார் தலையை சொறிந்து கொண்டிருக்கிறார்கள்.