குடிகார கணவனால் வாழ்வை தொலைத்த யாழ் பெண்ணின் கதை??

பி.சியா

குடிகுடியை கெடுக்கும் என்று முன்னவர்கள் சும்மா சொல்லி வைத்துவிட்டு போகவில்லை. அது அனுபவ வார்த்தை. பல்லாண்டு கால அனுபவம். குடி சீரழித்த குடும்பங்களின் கதையை நிச்சயம் எல்லோரும் அறிந்து வைத்திருப்போம்.

தமிழர் வாழ்வில் குடியென்பது வாழ்வின் எல்லா கூறுகளிலும் பிணைந்தது. துக்கம், சந்தோசம், இரண்டுமேயற்ற ஏகாந்த மனநிலை என அனைத்து சமயத்திலும் குடிப்பார்கள். இந்த மனநிலையை காரணமாகவும் சொல்வார்கள். நமது சூழலில் உள்ள ஆண்களில் பெரும்பாலானவர்கள் இவர்கள்தான். அவர்களிற்கு குடிப்பதற்கு காரணம் தேவையில்லை. குடிக்க வேண்டும். அவ்வளவுதான்.

இதற்கு கொம்புசீவி விடுகிறது சினிமா. காதலில் தோல்வியா, ஆயா அடித்தாரா உடனே சாரயக்கடையில் பாட்டுசீன். காதலி சம்மதித்தாளா, வேலை கிடைத்ததா அதற்கும் நண்பர்களுடன் “ஓப்பின் த பாட்டல்“.

நம்மவர்கள் மதுவிற்கு போதையென்றும் ஒரு அர்த்தம் வைத்துள்ளனர். அது பண்பாட்டு பெயர். நமது பண்பாட்டில் நிதானமாக மது அருந்துபவன் “மொன்னையன்“. குடித்தால் அண்டசராசரமும் சுழல வேண்டும். உண்மையான குடிகாரன் என்றால் தள்ளாட வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். குடிகாரர்கள் பலரிடம் பேசினீர்கள் எனில், அவர்கள் அனைவருமே சொல்லி வைத்ததுபோல சொல்வார்கள் “ஊருப்பட்ட பிரச்சனை. கவலையை மறக்க குடிக்கிறோம்“ என.

மனச்சிக்கல், குடும்ப சிக்கல் உள்ளிட்ட பிரச்சனைகளிருந்து விடுபட மிகச்சிறியளவானர்கள் தியானத்தை நாடுகிறார்கள். அவர்கள் ஓரளவு படித்தவர்களாக இருப்பார்கள். பெருமளவானவர்கள் மதுவைத்தான் நாடுகிறார்கள். இதில் அனைத்து வகையானவர்களும் இருப்பார்கள்.

போதையாகி, புறஉலக நினைவுகளிலிருந்து விடுபட, விடுபடுமளவிற்கு குடிக்கிறார்கள். குடி சிலருக்கு தற்காலிக நிவாரணங்களை கொடுக்கலாம். ஆனால், அது நமது சமூகத்தை கொல்லும் முதலாவது விசக்கிருமியாக உள்ளது.
நமது சமூகத்தில் தாராளமாக காணப்படும் குடும்ப வன்முறைகளிற்கு பிரதான காரணம் மதுதான். குடித்துவிட்டு ஆணொருவன் வீட்டுக்கு செல்வானெனில், அந்த குடும்பமே சீர்குலைந்து விடுகிறது.

நிம்மதிக்காக ஒருவன் குடித்துவிட்டு சென்றால், அவனது குடும்பத்தினது நிம்மதியே சீர்கெட்டுவிடும். மனைவியுடன் ரகளை, பிள்ளைகளிற்கு அடிஉதை, அயலவர்களுடன் சச்சரவென ஒருவனின் வாழ்க்கை தொடருமெனில், அந்தக்குடும்பத்தின் முதல் எதிரியே அவன்தான். கணவனாக, தந்தையாக குடும்பத்தில் அவனது பாத்திரம் நீடித்தாலும் அவன் பற்றிய எந்த உயர்மதிப்பீடும் பிள்ளைகளிடம் ஏற்படுவதில்லை.
இந்த தொடருக்காக யாழ்ப்பாணத்தின் பல கிராமங்களிற்கும், அகதிகள் முகாம்களிற்கும் சென்று ஏராளம் குடும்பங்களுடன் பேசினேன். அதில் கணிசமான குடும்ப ஆண்கள் குடிகாரர்கள். குடிகார ஆண்களின் குடும்பங்களில் உள்ள வளர்ந்த பிள்ளைகளுடன் பேசியபோது அவர்கள் யாரிடமும் தமது தந்தையர்கள் பற்றிய உயர்ந்த மதிப்பீடுகள் இருக்கவில்லை. அவர் பற்றி பேச விரும்பாமல், அந்த உறவை கடந்து செல்லவே விரும்புகிறார்கள்.

குடிகார தந்தையுள்ள பிள்ளைகளின் மனதில் ஆறாத ரணமொன்றும் உள்ளது. சிறுவயதிலேயே ஏற்படும் இந்த மனப்பாதிப்புக்கள் அவர்களை உளரீதியான தாக்கத்திற்கு உள்ளாக்குமென்பது நிச்சயம்.

மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்ற வாசகங்கள் பரவலாக உள்ளதான். இதை வைத்து மதுவிற்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என கொள்ள முடியாது. ஏனெனில், மதுநிலையங்களிற்கு அனுமதியளிப்பதே அரசுதான். ஒவ்வொரு ஊரிலும், கிராமத்திலும், பிரதானவீதிகளிலும் மதுநிலையங்கள் உள்ளன. அத்தனையும் அரசஅனுமதி பெற்றவை. மதுப்பாவனை பற்றி சில காலத்தின் முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகிரங்கவே கவலைப்பட்டிருந்தார். எனினும், பாவிக்கப்பட்ட மது அரச அங்கீகாரம் பெற்றிருந்தது என்பது கவனிக்கத்தக்கது.

முன்னைய அரசின் அமைச்சர் ஒருவர் சொந்தமாக மது உற்பத்தி தொழிற்சாலையொன்றையே வைத்திருந்தார். தாராளமாக எதனோல் இறக்குமதி நடந்தது. போதைவஸ்து கடத்தல்காரர்கள் அமைச்சரவையை அலங்கரித்தார்கள். மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில்தான் அதிகளவான மதுவிற்பனை நிலையங்களிற்கு அனுமதி கிடைத்தது. இதில் கவனிக்கத்தக்க இன்னொரு விடயம், நமது தமிழ் அரசியல்வாதிகள் பலரிடமும் மதுவிற்பனை நிலையங்கள் உள்ளன.

யாழ்ப்பாணத்தில் பல்வேறு உயர்ரக விடுதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவை அனைத்திலும் மது அருந்தும் வசதி உள்ளது. இந்த விடுதிகளில் பெரும்பாலானவை புலம்பெயர்ந்த தமிழர்களிற்கு சொந்தமானவை. யுத்த சமயத்தில் நாட்டைவிட்டு வெளியேறியவர்கள், பணம் சேர்த்துக் கொண்டு வந்து பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் மதுச்சாலை நடத்தும் கொடுமையை என்னவென்பது?

மதுப்பாவனையுள்ள கணவன் எனில் ஆயுள் முழுக்க துயரத்தை அனுபவிப்பவள் மனைவிதான். மதுபோதையில் மிதக்கும் ஆண்களின் உலகம் இயல்பற்றதாக இருக்கும். சாதாரண அன்பு, பாசத்திற்கு அங்கு இடமிருப்பதில்லை. மனித இயல்புகளின் விதிவிலக்கான அம்சங்களையும், வாழ்க்கையின் மறுபக்கங்களையுமே அவர்களால் பார்க்க முடியும். அவர்களின் நிதானமிழப்பென்பது அந்தக்குடும்பத்தின் வாழ்விழப்பு. இதற்கு உதாரணம் பரமேஸ்வரியின் கதை. யாழ்ப்பாணத்தின் புறநகரொன்றில் வாழும் பரமேஸ்வரியின் வாழ்வை மது எப்படி துவம்சம் செய்ததென்பதை பாருங்கள்.

அம்மா, ஒரு சகோதரனுடன் பிறந்தவர் பரமேஸ்வரி. அப்பா இறந்துவிட்டார். சகோதரன் இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்டு போய்விட்டான். தாயார் பலகாரம் சுட்டு, வீடுகளில் சமைத்து குடும்பத்தை கவனித்தார். ஆடு, கோழியும் வளர்த்தார்கள்.

பரமேஸ்வரி குடும்பத்திற்கு காணியிருந்தது. வீடு இருக்கவில்லை. பரமேஸ்வரி திருமண வயதிற்கு வந்ததும், தாயார் தீவிரமாக மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கினார்.

திருமணத்தரகர் ஒருவர் சம்பந்தமொன்று கொண்டு வந்திருக்கிறார். மாப்பிள்ளை நல்லவர், சோலி சுரட்டில்லாதவர், மேசன் வேலை செய்கிறார் என தரகர் சொன்னதை பரமேஸ்வரி குடும்பம் நம்பியது. ஐந்து இலட்சம் சீதனத்துடன் ஓட்டோ வாங்கிக் கொடுத்து அவரை “கௌரவமான“ தொழிலுக்கு மாற்றி மாப்பிள்ளையாக்கினார்கள்.

திருமணம் என்றதும் பரமேஸ்வரிக்குள் ஆயிரம் கனவுகள் விரிந்தன. இதுவரையான கஸ்ர வாழ்க்கை முடிந்து புதிய வாழ்க்கை ஒன்றை எதிர்பார்த்தார். மணவறைக்கு சென்று, கணவன் தாலி கட்டியபோது “என்ர வாழ்க்கை சந்தோசமாக இருக்கணும். கணவன் நிம்மதியாக இருக்கணும்“ என கடவுளை மன்றாடியதாக கூறினார் பரமேஸ்வரி.

பரமேஸ்வரியின் கனவுக்கு ஆயுள் அதிகமிருக்கவில்லை. முதலிரவுக்காக பரமேஸ்வரி காத்திருக்க, மதுபோதையில் கணவன் வந்தான். பரமேஸ்வரியின் கனவுகள் ஒரு நொடியில் சிதறி வீழ்ந்தன. அன்றிரவு அடித்து, பலவந்தப்படுத்திதான் அவன் உறவை வைத்துக் கொண்டான்.

அந்த கொடிய அனுபவத்தை பரமேஸ்வரி இப்படி குறிப்பிட்டார்- “நாளை என்னவாகுமோ என நிமிடத்திற்கு நிமிடம் ஏங்கினேன். பயத்தில் நெஞ்சு படபடத்துக் கொண்டிருந்தது. அம்மா எனக்கு கலியாணமே கட்டி வைக்காமல் இருந்திருக்கலாமென மனதுக்குள் திட்டினேன். எல்லோரும் முதலிரவில் காதலில்தான் குளிப்பார்கள். நான் கண்ணீரில் குளித்தேன்“.

திருமணத்தின் பின்னரும் கணவனது குடி அதிகரித்துக் கொண்டே சென்றது. அவனை தட்டிக் கேட்கவோ, செல்லமாக கேட்கவோ வாய்ப்பிருக்கவில்லை. மீறிக் கேட்டால் அடி உதைதான். சில சமயங்களில் நெருப்பால் சூடும் வைத்தான். கணவன் குடிக்காத சமயங்களில்தான் பரமேஸ்வரிக்கு நிம்மதி. மிகுதி நேரமெல்லாம் குடியும் அடியும்தான். ஒரு கட்டத்தில் அடியை தாங்கிக் கொள்ளும் சக்தியை பரமேஸ்வரி இழக்கத் தொடங்கினார்.

கணவனின் உழைப்பு பரமேஸ்வரிக்கு தெரியாது. வீட்டுக்கு எப்பொழுதாவது சிறியதொகை பணம் கொடுத்தாலும், பின்னர் அதையும் வாங்கிவிடுவான்.
பரமேஸ்வரி கர்ப்பமடைந்திருந்த சமயத்திலும் குடியும் அடியும் தொடர்ந்தது. குழந்தைக்கும் சேர்த்து வயிற்றில் உதைந்தான். கணவனின் அடி, உதைக்கு பயந்து பயந்து வாழ்ந்ததாலேயே தனது பிள்ளை இதயம் பலவீனமாக பிறந்ததாக சொல்கிறார் பரமேஸ்வரி. இப்பொழுதும் அந்த பிள்ளை கிளினிக்கிற்கு சென்று வருகிறது. இப்பொழுது பிள்ளை ஓரளவு தேறிவிட்டதென்கிறார்.

அளவற்ற குடி, எந்த நேரமும் போதை. விளைவு, இயல்பற்ற மனிதனானான் கணவன். திருமணத்தின் முன்னர் பரமேஸ்வரிக்கு வேறு ஆணுடன் தொடர்பிருந்ததா என கேட்டு அடிக்கத் தொடங்கினான். கற்பனையாக எதையாவது நினைத்துவிட்டு, அதை உண்மையென நம்பி, பரமேஸ்வரியை அடித்து உதைத்தான்.
பரமேஸ்வரிக்கு நடக்கும் சித்திரவதை ஊருக்கே தெரியும். எல்லோரும் அனுதாப்பட்டார்கள். ஆனால் கணவனிடமிருந்து காப்பாற்ற யாராலும் முடியவில்லை.
இறுதியில் தன்னைத்தானே காப்பாற்ற பரமேஸ்வரி கண்டடைந்த வழி விவாகரத்து. நீதிமன்றத்தை நாடினார். வழக்கு தவணைகளிற்கும் கணவன் வருவதில்லை. இதனால் நீதிமன்றம் விரைவிலேயே விவாகரத்து கொடுத்து விட்டதென்கிறார் பரமேஸ்வரி.

தாய் மற்றும் எட்டு வயதான மகனுடன் அறையொன்றை வாடகைக்கு எடுத்து குடியிருக்கிறார் பரமேஸ்வரி. தாயுடன் சேர்ந்து சமைக்க செல்கிறார். கோழி வளர்க்கிறார். இந்த வருமானங்கள், சமுர்த்தி உதவியை கொண்டு மகனை படிக்க வைக்கிறார்.

அவர்களது காணியில் வீட்டு திட்டத்தின் மூலம் வீடொன்றை கட்டிக் கொண்டிருக்கிறார். மகனை படிக்க வைக்கவும், மலசலகூடம் அமைக்கவும் யாராவது உதவ வேண்டுமென பரமேஸ்வரி கோருகிறார்.

இனி திருமணமென்பதே வேண்டாம் என்பதில் பரமேஸ்வரி உறுதியாக இருக்கிறார். ஆண்கள் மீதே அவருக்கு அவநம்பிக்கை ஏற்பட காரணம், குடி. ஆணொருவனின் குடிப்பழக்கத்தால் பரமேஸ்வரியின் குடும்பம் வாழ்வெல்லாம் காயத்துடன் பயணிக்கப் போகிறது.

பரமேஸ்வரியின் பிள்ளைக்கு தந்தை பற்றிய சித்திரம் எப்படி அமையும்? எனது அப்பா ஒருகுடிகாரன் என்றா அந்தப்பிள்ளை தனது கதையை தொடங்கும்?