படிப்பில் கவனம் செலுத்தவில்லை என்ற காரணத்துக்காக தாய் தந்தை அற்ற சிறுவனை அவரது மாமனார் மிகவும் கொடூரமாக தாக்கிய சம்பவம் ஒன்று தாயகத்தில் இடம்பெற்றுள்ளது.
வவுனியா மாவட்டம் கனகராயன்குளம் பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சிறுவன் மாங்குளம் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .கனகராயன்குளம்-கிரிசுட்டகுளம் பகுதியைச் சேர்ந்த கணேசமூர்த்தி கினுஜன் என்னும் ஆறு வயதுச் சிறுவனையே அவரது மாமா தாக்கியுள்ளார்.
தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும் அற்ற நிலையில் குறித்த சிறுவனை மாமனே கவனித்து வரும் நிலையில், வீட்டில் கல்வி கற்கவில்லை என்கின்ற காரணத்தினால் மின்வடம் (வயர்) ஒன்றை எடுத்து மோசமாகத் தாக்கியுள்ளார்.
இதனால் உடலில் பலத்த அடிகாயங்களுக்கு உள்ளான சிறுவன் மீட்கப்பட்டு மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் தொடர்பாக கனகராயன்குளம் பொலிசார் மற்றும் மாவட்ட சிறுவர் நன்நடத்தை திணைக்களம் ஆகியவற்றின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், குறித்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகக் கூறப்பட்டுள்ளது.