ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சுயரூபம் தற்பொழுதுதான் வெளிப்பட்டுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றுக்கு நேற்றிரவு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
ஜனாதிபதியின் இந்த செயற்பாட்டை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தையும் அவர்களது குடும்பத்தையும் அதிகமாக விமர்சனம் செய்தது ஜனாதிபதி மைத்திரியேயாகும்.
தேர்தலில் தோல்வியடைந்தால் ஆறு அடி மண்ணில் புதையுண்டுவிடுவேன், மஹிந்த தரப்பு என்னை புதைத்துவிடுவார்கள் என ஜனாதிபதி கூறினார்.
எனினும் அதே வாயில் இன்று சிரித்து மஹிந்தவை கட்டித் தழுவுவது அருவறுப்பாக உள்ளது.
யாரும் வெளியில் இறங்கப் பயந்த காலத்தில் நாம் வெளியே இறங்கி பிரச்சாரம் செய்து ஜனநாயகத்தை நிலைநாட்ட முயற்சித்தோம் எனினும், ஜனாதிபதி அரசியல் மேடைகளில் கூறியவற்றை மறந்து விட்டு இவ்வாறு செய்துள்ளார்.
நாம் உள்ளிட்ட நாட்டு மக்கள் அனைவரும் ஜனாதிபதி யார் என்பதனை தற்பொழுது புரிந்து கொண்டுள்ளனர்.
நாம் கட்சி மாறவோ அல்லது மாற்றங்களை விரும்பவோ இல்லை. இந்த நிலைமை குறித்து மக்களுக்காக நான் மிகுந்த வேதனை அடைகின்றேன் என ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.