ஆப்கானிஸ்தான் நாட்டின் வர்தாக் மாகாணத்தில் காவலர் குடியிருப்பு அமைந்திருக்கிறது. அந்த குடியிருப்பில் இருந்து இன்று காலை புறப்பட்ட பேருந்தில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உள்பட 20க்கும் மேற்பட்டோர் ஏறினர்.
இந்தநிலையில், குடியிருப்பு வாசல் அந்த பேருந்து அருகே வந்தது. அப்போது அங்கு வந்த தற்கொலைப்படை தீவிரவாதிகள் வெடிமருந்துகள் நிரம்பிய கார் மூலம் பஸ் மீது மோதி தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் பேருந்தில் பயணம் செய்த 2 அதிகாரிகள், 3 ஊழியர்கள் என்று மொத்தம் 5 போலீசார் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து மீட்புக்குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் இருக்கும் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்களில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று தெரிவித்தனர். காவல்துறையினர் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலுக்கு தலிபான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.