மைத்திரியால் மிரட்டப்பட்ட மஹிந்த!! கொழும்பில் நேற்று நடந்த திடுக்கிடும் நேரடி றிப்போட்

நேற்று மாலை கொழும்பில் ஜனநாயகத்தின் பெயரில் அதிரடியாக அரங்கேறிய அரசியல் சதி எவ்வாறு திட்டமிடப்பட்டது என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சதித்திட்டத்தை கனகச்சிதமாக அதனை அரங்கேற்றி முடிக்கும் வரைஅது பற்றிய எவ்வித தகவல்களையும் கசியவிடாமல் ஒப்பேற்றியிருக்கிறது ஜனாதிபதி தரப்பு.

நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி நிதியத்திற்கான கூட்டம் நடைபெற்றது.

எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் அந்த நிதியத்தின் உறுப்பினரான சம்பந்தனும் அக்கூட்டத்தில் பங்குபற்றினார்.

அச்சமயம் கூட்டத்திலும் தனித்தும் சம்பந்தனுடன் ஜனாதிபதி மைத்திரிபால உரையாடினார். ஆனால் அச்சமயம் இன்னும் ஓரிரு மணித்தியாலயத்தில் நல்லாட்சி அரசை வீட்டுக்கு அனுப்ப போகிறோம் என்றோ, அதனால் உங்கள் எதிர்க்கட்சி பதவி பறிபோகப்போகிறது என்றோ எந்த சமிக்ஞையும் சம்பந்தனுக்கு காட்டவில்லை மைத்திரி.

நேற்று மாலை 5மணியளவில் நல்லாட்சி அரசில் மிச்சமாக அங்கம் வகிக்கும் 23 சுதந்திரக்கட்சி எம்.பிக்களையும் ஒரு கலந்துரையாடலுக்கு அழைத்தார் மைத்திரி.

ரணிலை தொடர்ந்து பிரதமராக வைத்திருக்க முடியாது என்றார். மாற்று ஒருவரை பிரதமராக நியமிக்க போகிறேன் என்றார். ஆனால் அந்த மாற்று நபர் மஹிந்த ராஜபக்ச என்றோ அல்லது வேறு யாரோ என்றோ குறிப்புத் தனும் காட்டவில்லை.

ஆனால் ஜனாதிபதியின் பேச்சில் அவர் ஐ.தே.கட்சியிலிருந்து வேறு ஒருவரை தான் பிரதமராக நியமிக்கப்போகிறார் என்றே சு.கட்சியினர் எண்ணினர்.

திடீரென ஜனாதிபதியின் உத்தரவில் ஒரு கடிதம் அங்கு கொண்டுவரப்பட்டது. அதில் “நல்லாட்சி அரசுக்கான ஆதரவை சு.கட்சி உள்ளடங்கிய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு விலக்கிக் கொள்வதாக எழுதப்பட்டிருந்தது.”

அதில் கையொப்பம் இடுமாறு ஐ.ம.சு.கூட்டமைப்பின் செயலாளரான அமைச்சர் மஹிந்த அமரவீர வற்புறுத்தப்பட்டார்.

மஹிந்த ராஜபக்ச தரப்பை முற்றுமுழுதாக எதிர்க்கும் சு.கட்சியின் அமைச்சர்களான மகிந்த அமரவீர, துமிந்த திஸநாயக்க போன்றோர் உடனடியாக நல்லாட்சி அரசில் இருந்து வெளியேறும் திட்டத்திற்கு உடன்பட மறுத்தனர்.

ரணிலை வீட்டுக்கு அனுப்பிவிட்டு மஹிந்தவை பிரதமராக்கும் எண்ணத்துடனேயே இந்த காய்நகர்த்தலை மைத்திரி முன்னெடுக்கிறார் என்பது அப்போதும் கூட மகிந்த அமரவீர, துமிந்த திஸ்நாயக்க போன்றோருக்கு தெரிந்திருக்கவில்லை.

மகிந்த அமரவீரவிடம் ஒப்பந்தத்தை வற்புறுத்தி பெற்றதும் அந்த கடிதத்தின் ஒரு பிரதி சபாநாயகருக்கு அனுப்பப்பட்டது. அதன்பின்னர் தான் புதிய பிரதமராக பதவியேற்க மஹிந்த ராஜபக்ச வந்துகொண்டிருக்கிறார் என்ற செய்தி நல்லாட்சி அரசில் மிஞ்சியிருந்த சு.கட்சி எம்.பிக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது.

தற்போதைய அரசியலமைப்பு ஏற்பாடுகளின்படி அரசியலமைப்பின் 19ஆவது திருத்தப்படி பதவியில் இருக்கும் ஒரு பிரதமரை பதவி விலக்குவது சுலபமான விடயம் அல்ல.

இது தொடர்பான அரசமைப்பு விதிகளின் சிங்கள மொழிபெயர்ப்பில் உள்ள ஒரு மயக்கமான வசனத்தை சாதகமாக பயன்படுத்தி அந்த வாசகத்தின் அர்த்தம் ஜனாதிபதிக்கு இதில் முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளது என்பது போன்ற வியாக்கியானத்தை சட்டமா அதிபரிடம் பெற்று அதன் மூலம் இந்த தந்திரோபாய நகர்வை முன்னெடுத்திருக்கிறார் ஜனாதிபதி மைத்திரி.

இப்படி தன்னை பதவி விலக்கியமைக்கு எதிராக ரணில் நீதிமன்றத்திற்கு போகலாம். ஆனால், எது எப்படி என்றாலும் இதில் இறுதியில் ஆட்சியை தீர்மாணிக்க போவது எம்.பிக்களின் ஆதரவு பற்றிய அட்சரகணித கணக்குத்தான்.

ரவி கருணாயக்க தலைமையிலான ஒரு குழு ஐ.தே.க பக்கத்திலிருந்து மஹிந்த பக்கம் பாய்ந்துவிட்டது என்று நேற்றிரவு கொழும்பு அரசியலில் பேசப்பட்டது.

ஹக்கீமின் முஸ்லீம் காங்கிரஸ், ரிஷாத்தின் கட்சி, மனோகணேசன் திகாம்பரம் ராதாகிருஷ்ணன் ஆகிய முத்தரப்பின் ஆறு எம்.பிக்கள் அணி என்பவை எல்லாம் பேரம் பேசி, அரசியல் குதிரையோட்டங்கள் நடாத்தி இனி எந்த முடிவுக்கு வரப்போகின்றன என்பதில் தான் விடயங்கள் தங்கியிருக்கின்றன.

இதே சமயம் சு.கட்சியில் இருந்தபடி மஹிந்த ராஜபக்சவை கடுமையாக எதிர்த்து வந்த மகிந்த அமரவீர, துமிந்த திஸாநாயக்க போன்றோரும் இப்போது மதில் மேல் பூனையாக இருப்பார்கள்.

அவர்கள் என்ன முடிவு செய்வார் என்பதும் தெரியாது. இவை எல்லாம் சேர்ந்தே பிரதமர் மஹிந்த தலைமையிலான அரசின் ஆயுளை தீர்மானிக்கும்.

இதற்கிடையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி ஆகியவற்றின் ஆதரவுடன் தாம் நாடாளுமன்றத்தின் அறுதிப்பெரும்பான்மையை 113 எம்.பிக்களின் ஆதரவை பெறமுடியும் என்றால் அதன் அடிப்படையில் ஜனாதிபதியின் இந்த செயற்பாடு அரசமைப்பு விரோத நடவடிக்கை எனத் தெரிவித்து அதற்கு எதிராக ஜனாதிபதி மேல் குற்றப் பிரேரணை ஒன்றை கொண்டுவந்து அதனை தங்கள் கட்சியை சேர்ந்த சபாநாயகரிடம் ஒப்படைத்து, அவரை அதனை ஏற்க வைத்து அதன்மூலம் உடனடியாக நாடாளுமன்றத்தை இடைநிறுத்தும் ஜனாதிபதியின் அதிகாரத்திற்கு விரைந்து “செக்” வைப்பதற்கும் ஜனாதிபதி மீது தொடர்ந்து நடவடிக்கை எடுப்பதற்கும் ஐ.தே.கட்சி திட்டமிடுவதாக தகவல்கள் வெளியாகின்றன.