தகாத உறவால் மனைவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில், பத்து ஆண்டுகள் தண்டனை பெற்ற கணவனை விடுதலை செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த மாணிக்கம் என்பவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருந்த நிலையில், வேறு ஒரு பெண்ணுடன் அவருக்கு தகாத உறவு ஏற்பட்டுள்ளது.
இதனை அவரது மனைவி சங்கீதா கடுமையாக எதிர்த்துள்ளார். எனினும், மாணிக்கம் அவரது பேச்சை கேட்காததால், தனது 18 மாத பெண் குழந்தையுடன் சங்கீதா கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார்.
இதனைத் தொடர்ந்து மாணிக்கத்தின் மீது தற்கொலைக்கு தூண்டுதல், வரதட்சணை கேட்டு துன்புறுத்தல் ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் ஆத்தூர் பொலிசார் வழக்குப்பதிவு செய்தனர்.
விசாரணைக்கு வந்த இந்த வழக்கின் முடிவில், மாணிக்கத்திற்கு தற்கொலைக்கு தூண்டிய குற்றத்திற்காக 10 ஆண்டு சிறை தண்டனையும், வரதட்சணை கொடுமை குற்றத்திற்காக 3 ஆண்டு சிறை தண்டனையும், 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
அதன் பின்னர், மாணிக்கம் இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான மேல்முறையீட்டில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அதில், இந்த வழக்கில் மாணிக்கம் மீது வரதட்சணை கேட்டு மனைவி சங்கீதாவை கொடுமை செய்ததாக சங்கீதாவின் தயார் மட்டுமே புகார் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. மேலும், தற்கொலைக்கு சங்கீதாவை தூண்டியதாக கூறப்படும் குற்றச்சாட்டும் சரிவர நிரூபிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கணவன் வேறு ஒரு பெண்ணுடன் உறவில் இருந்ததால், மனைவி தற்கொலை செய்துகொண்டார் என்று எல்லா சூழ்நிலைகளிலும் கணவனை தண்டிக்க முடியாது.
இதன் அடிப்படையில், தகாத உறவினால் மனைவியை தற்கொலைக்கு மனுதாரர் தூண்டினார் என்று மாணிக்கத்தை தண்டிக்க முடியாது. அதனால் அவரை இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்வதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.