சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு10 முதல் 50 வயதுடைய பெண்கள் செல்ல அனுமதி கேட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் கோவிலுக்குள் 10 முதல் 50 வயதுடைய பெண்கள் செல்ல அனுமதி அளித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு விவகாரத்தில் சில தரப்பினர் கோவிலுக்குள் பெண்கள் செல்லலாம் என்றும், மற்றும் பலர் கோவிலுக்குள் பெண்கள் சென்றால் சபரிமலை ஐயப்பன் சன்னதியின் புனிதம் கெட்டுவிடும் என்றும் தெரிவித்தனர்.
உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி 10 முதல் 50 வயதுடைய பெண்கள் செல்லலாம் என்ற அடிப்படையில் ஒரு சில பெண்கள் கோவிலுக்குள் செல்ல முயன்றனர்.
இதனால் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பல்வேறு இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதால், அங்கு 1000க்கு மேற்பட்ட போலீஸ் குவிக்கப்பட்டனர். கோவிலுக்குள் செல்லும் பெண்களை போராட்டக்காரர்கள் வழியிலேயே தடுத்து நிறுத்தியதால், கோவிலில் பதற்றம் ஏற்பட்டதால் போலீசார் பெண்களிடம் பேசி அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர், சில பெண்கள் மனம் திருந்தி திரும்பி வீட்டுக்கு சென்றனர்.
இதனை தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோவிலின் பந்தள ராஜா குடும்பத்தை சேர்ந்தவர்களிடம் கேரள அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதுவரை 21 பெண்கள் கோவிலுக்குள் செல்ல முயன்றதை அடுத்து கோவிலை சேர்ந்தவர்கள் பெண்கள் கோவிலுக்குள் வர முயன்றால் நடையை இழுத்து மூடுவோம் என்று எச்சரித்தனர்.
பல்வேறு பிரபலங்கள் சபரிமலைக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், தற்போது ஐயப்ப தர்ம சேனா தலைவர் ராகுல் ஈஸ்வர் பத்திரிகையாளர்களிடம் பேசும் போது, அவர் சபரி மலையில் பெண்கள் நுழைய முயன்றால் கையை அறுத்து ரத்தம் சிந்த செய்து கோவிலை மூடுவதற்கு 20 பேர் காத்திருக்கிறோம் என்று கூறினார். ஐயப்பன் கோவிலுக்குள் ரத்தம் சிந்தினால் மூன்று நாட்கள் நடை தொடர்ந்து மூடப்படும் என்று தெரிவித்தார்.
தர்ம சேனா தலைவர் கூறியதை அடுத்து அவர் மீது சமூக ஆர்வலர்கள் புகார் அளித்ததால் கொச்சி காவல் ஆணையர் அலுவலகத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.