தன்னை கொலை செய்யும் திட்டத்துடன் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவுக்கு தொடர்பிருப்பது விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டதாக அண்மையில் தகவல் வெளியானது.
அதனையடுத்து, கொழும்பு அரசியல் சூடுபிடித்திருந்த நிலையில், இந்த சதியின் பின்னணியில் இந்திய உளவு அமைப்பான றோ இருந்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கூறியதாக செய்தி வெளியாது. எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனை மறுத்திருந்தார்.
இந்த நிலையில், புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்ட நிலையில், நேற்று இரவு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் விசேட கூட்டம் இடம்பெற்றது.
இதன்போது, தன்னை கொலை செய்யும் திட்டத்துடன் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவுக்கு தொடர்பிருப்பது விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனினும் அது அரசியல் காரணமாக மறைக்கப்பட்டதாகவும், இதன்காரணமாகவே, மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்க தீர்மானித்ததாக ஸ்ரீலங்கா ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் 95 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் ஜனாதிபதி இதனை கூறியுள்ளாதாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் தம்மை கொலை செய்ய முயற்சிக்கப்பட்ட விடயத்துக்கு பின்னால் மற்றும் ஒரு முக்கியஸ்தரின் பெயர் உள்ளதாகவும், விசாரணைகள் முடிவடையாத காரணத்தினால் அதனை வெளியிட முடியாது என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
அத்துடன், அந்தப் பெயரை தெரிந்துக் கொண்டால் மக்கள் அதிர்ச்சியடைவார்கள் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், சரத் பொன்சேகா மீண்டும் சிறைக்கு செல்லும் நிலை ஏற்படலாம் என, தகவல்கள் வெளியாகியுள்ளன.