குடியரசு தின விழாவிற்கு வர மறுத்த அதிபர்!!

கடந்த சில மாதங்களுக்கு முன் இந்தியக் குடியரசு தின விழாவில் தலைமை சிறப்பு விருந்தினராக பங்கேற்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்க்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அப்போது இருந்த சூழ்நிலையில் குடியரசு தின விழாவில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிச்சயம் பங்கேற்பர் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டது.

இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யாவிற்கு சென்று, இந்தியா மற்றும் ரஷ்யாவிற்குமான சில பொருளாதார வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார் என தெரிவிக்கப்படுகிறது. இதனை அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையாக விமர்ச்சித்தார். இன்னும் காட்டமாக இந்தியா மற்றும் ரஷ்யாவிற்குமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதால், இந்தியா பல்வேறு பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும், அதுமட்டுமின்றி ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மோசமாக சரிந்தது. தற்போது இந்திய குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜனவரி மாதத்தில் மாநிலங்களின் ஒன்றிய கூட்டத்தில் பங்கேற்க இருப்பதால், 2019ஜனவரி 26ஆம் நாள் இந்தியக் குடியரசு தின விழாவில் பங்கேற்க மாட்டார் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2015ஆம் ஆண்டு அதிபராக இருந்த அப்போதைய அதிபர் பாரக் ஒபாமா இந்தியக் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றது குறிப்பிடத் தக்கது.
இந்தியா மற்றும் அமெரிக்காவின் நல்லுறவில் விரிசல் ஏற்பட தொடங்கிவிட்டது என அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்