வன்னியர் இன மக்கள் தான் எனக்கு அரசியல் அடையாளம் காட்டியவர்கள்!. எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு!

சுதந்திர போராட்ட வீரர் எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியாருக்கு நினைவுமண்டபம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. சுதந்திரபோராட்ட வீரர் ராமசாமி படையாச்சியின் பிறந்தநாளையும் அரசு விழாவாக கொண்டாட இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் சிவ.சிதம்பர.ராமசாமி படையாச்சி அவர்கள், தமிழக அமைச்சரவையில் உறுப்பினராகவும், இந்திய மக்களவை உறுப்பினராகவும் இருந்தவர். இவரின் பெயரே விழுப்புரம் மாவட்டத்தின் முந்தைய பெயராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வன்னியகுல சத்திரிய பொதுச் சொத்து பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழக முதல்வருக்கு நன்றி கூறும் வகையில், அகில இந்திய வன்னியகுல சத்திரிய சங்கங்களின் சார்பில் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ராமசாமி படையாச்சியார் நினைவு மண்டபம் விரைவில் திறக்கப்படும். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் தற்போதைய அரசும் தான் வன்னியர் குல மக்களின் நலனுக்கு தொடர்ந்து செயலாற்றிக் கொண்டிருக்கிறது என கூறினார்.

எடப்பாடி சட்டமன்ற தொகுதியில், இருக்கிற வன்னியர் இன மக்கள் எனக்கு அரசியல் அடையாளம் காட்டியவர்கள். அந்த மக்கள் எப்பொழுதுமே என் இதயத்தில் இடம் பிடித்திருப்பார்கள்.

தேசப்பற்று கொண்டு மக்களுக்காக உழைத்து மறைந்த எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியாருக்கு பெருமையும், புகழும் சேர்க்கும் விதமாக சட்டசபையில் அவருடைய முழு உருவப்படம் வைக்கப்படும் என கூறினார்.