கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம் சாலக்குடி சேர்ந்தவர் விபின் (வயது 47). இவரது மனைவி சைனிமோல் (வயது 36). இவர்கள் மகள் ஆவணி (வயது 7). விபின் துபாயில் வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று சிறுமி பலத்த காயங்களுடன் வீட்டில் இறந்து கிடந்தார். சாலக்குடி காவல் துறையினர், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகள் இறந்தது குறித்து துபாயில் இருக்கும் விபினுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் விரைந்து வந்து மகளின் உடலை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
மகளின் இறப்பில் மர்மம் உள்ளதாக காவல் நிலையத்தில் புகார் செய்தார். மகள் உயிரிழந்தது குறித்து அவரது தாய் சைனிமோலிடம் விசாரணை நடத்தியபோது அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் பேசியுள்ளார்.
சந்தேகம் அடைந்த காவல் துறையினர் சாலக்குடி நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று திருச்சூர் மனநல மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்றபோது தாய் சைனிமோலை காவல் துறையினர் கைது செய்தனர்.
கள்ளகாதலுக்காக மகளை கொன்று மனநல பாதிப்பு போல் நடிக்கிறாரா? அல்லது வேறு காரணமா? என்று காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.