ரசிகரின் கனவை மரியாதையுடன் நிறைவேற்றி வைத்த டோனி….!!

இந்திய அணியின் தலைவரான கோஹ்லி மற்றும் டோனி மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு மரியாதை கொடுத்து செல்பி எடுத்துக் கொண்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்தியா-மேற்கிந்திய தீவு அணிகளுக்கிடையேயான ஐந்தாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி இன்று கேரளாவில் நடைபெற்றது.

இப்போட்டியில் முதலில் ஆடிய மேற்கிந்திய தீவு அணி, இந்திய வீரர்களின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 31.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 104 ஓட்டங்கள் எடுத்தது.

மேற்கிந்திய தீவு அணி சார்பில் மார்லோன் சம்யூல்ஸ் 24 ஓட்டங்களும், அணியின் தலைவர் ஜாசன் ஹோல்டர் 25 ஓட்டங்களும் எடுத்தனர்.இந்திய அணி சார்பில் சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

105 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தவான் 6 ஓட்டங்களில் வெளியேறினாலும், அடுத்து கோஹ்லியுடன் ஜோடி சேர்ந்த ரோகித் மேற்கிந்திய தீவு அணியின் பந்து வீச்சை ஒரு கை பார்த்தார்.

இதனால், இந்திய அணி 14.5 ஓவரிலே 105 ஓட்டங்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 3-1 என்று கைப்பற்றி அசத்தியுள்ளது.அபாரமாக ஆடிய ரோகித் 26 பந்துகளில் 63 ஓட்டங்களும், கோஹ்லி 29 பந்தில் 33 ஓட்டங்களும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

மேலும் இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் கேரளாவில் இருக்கும் திருவணந்தபுரம் மைதானத்திற்கு வந்த போது, அங்கு அவர்களை வரவேற்க பெருந்திரளான ரசிகர்கள் கூடி இருந்தனர்.அதில், மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவர் இருப்பதை பார்த்த டோனி நேராக அவரிடம் சென்று, சில நிமிடங்கள் அவருடன் பேசிவிட்டு சென்றார்.

டோனி பேசி முடிக்கும் வரை அதே இடத்தில் காத்து நின்றிருந்த கோஹ்லியும், டோனி சென்றவுடன் அந்த மாற்றுத்திறனாளி ரசிகரை மகிழ்விக்கும் விதமாக அவருக்கு தனது ஆட்டோகிராப்பை போட்டு கொடுத்துவிட்டு அவருடன் சேர்ந்து செல்பி எடுத்து கொண்டார்.

மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவரின் கனவை மரியாதையுடன் நிறைவேற்றி வைத்த தோனி மற்றும் கோஹ்லிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றது.