‘அமெரிக்காவின் இராஜதந்திரம் எங்கே?’ – சமந்தா பவர்

மைத்திரிபால சிறிசேனவின் கண்மூடித்தனமான செயல்கள் சிறிலங்காவில் வன்முறையை உருவாக்கும் சாத்தியம் உள்ளதாகவும், ஐ.நா தலையிட்டு பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்றும் ஐ.நாவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

கீச்சகப் பதிவுகளில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் கண்மூடித்தனமான செயல்கள் சிறிலங்காவில் உறுதியற்ற வன்முறையை உருவாக்கும் சாத்தியம் உள்ளது.

எச்சரிக்கை அறிகுறிகளை புறக்கணிக்க முடியாது, சிறிலங்காவிலும், பிராந்தியத்திலும் உள்ள தலைவர்களுடன் இணைந்து, நெருக்கடியைத் தீர்க்க ஐ.நா அவசரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிறிலங்கா அரசியலமைப்பு நெருக்கடியின் ஆபத்துகள் தெளிவாக உள்ளன. வன்முறைக்கு சாத்தியம் உள்ளது.

ராஜபக்ச மீண்டும் பதவிக்கு வருவதால், இன நல்லிணக்க முயற்சிகளை முடிவுக்குக் கொண்டு வரும்.

அமெரிக்காவின் இராஜதந்திரம் எங்கே?

உதவிகள் இடைநிறுத்தப்படும், தடைகள் இலக்கு வைக்கப்படும் என்பதை சிறிலங்கா தெரிந்து கொள்ள வேண்டும்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.