மதுரை அருகே உள்ள அழகர் கோயில் ரோட்டில் உள்ள சுந்தர்ராஜன்பட்டியைச் சேர்ந்தவர் மந்திரமூர்த்தி (வயது 45). மேலுார் ஆட்டுக்குளம் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மனைவி அல்லிமலர் (வயது 35).
இந்த இருவருக்கும் ஏற்பட்ட பன்றிக்காய்ச்சலின் அறிகுறி காரணமாக, இருவரும் மதுரை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். அங்கே இவர்களுக்கு ரத்தப் பரிசோதனை மேற்கொண்ட போது, இருவருக்கும் பன்றிக் காய்ச்சல் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டது. தனிக் கவனம் செலுத்தி, மருத்துவர்களும், இவர்களைக் காப்பாற்ற போராடினார்கள். ஆனாலும், சிகிச்சை பலன் இன்றி, மந்திரமூர்த்தி பலியானார்.
இதனை அடுத்து, சற்று நேரத்தில், அல்லிமலரும் சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்தார். இதனால், மதுரையில், இது வரை, பன்றிக் காய்ச்சலுக்கான பலி 7-ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்தப் பன்றிக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்ட 9 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.