ஒரு பெண் சண்டையிட்டதால் 15 உயிர்களை காவுவாங்கிய பேருந்து.!

கடந்த ஞாயிற்றுக்கிழமை சீனாவின் வான்ஜோ பகுதியில் பயணிகள் பேருந்து பாலத்தை உடைத்துக்கொண்டு ஆற்றில் விழுந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 15 பேரும் பலியாகினர். விபத்துக்கான காரணம் பற்றி காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

ஓட்டுநர் போக்குவரத்து விதிகளை மீறி வாகனத்தை ஓட்டிச் சென்றதால் விபத்து நடந்திருக்கும் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர், விபத்துக்குள்ளான பேருந்து புறப்பட்ட இடத்தில் இருந்து விபத்து ஏற்பட்ட பகுதி வரையிலான கண்காணிப்பு கேமரா பதிவுகள் மற்றும், பேருந்து தாறுமாறாக ஓடியபோது அருகில் சென்ற ஒரு வாகனத்தின் டேஷ்போர்டு கேமரா பதிவை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அதில், பஸ் தவறான பாதையில் சென்றது மட்டும் தெரியவந்தது. அதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை.

இந்நிலையில், நீர்மூழ்கி வீரர்கள் மூலம் ஆற்றில் மூழ்கிய பேருந்தில் இருந்த கேமரா பதிவு மீட்கப்பட்டது. அதனை ஆய்வு செய்த பின்னர் விபத்துக்கான உண்மையான காரணம் கண்டுபிடிக்கப்பட்டது.

10 வினாடிகள் ஓடும் அந்த வீடியோ பதிவில் பேருந்து ஓட்டுநருடன் சுமார் 48 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் பயணி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தன் செல்போனால் தாக்குவதும், பதிலுக்கு ஓட்டுநர் தனது வலது கையால் தாக்குவதும், பேருந்து தாறுமாறாக செல்வதை கவனித்த பயணிகள் பயத்தில் கத்தி கூச்சலிடுவதும் பதிவாகி இருக்கிறது. பேருந்தில் பயணி ஒருவர் ஓட்டுநரை தாக்கியதால் பேருந்து விபத்துக்குள்ளாகி, 15 உயிர்களை பலி வாங்கியிருக்கிறது.