தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 4 பேர் எதிர்வரும் 2 நாட்களுக்குள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனை மேற்கோள் காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
எனினும், தான் யாருக்கும் ஆதரவு வழங்காமல் இருந்த போதிலும், மக்களுக்கு நன்மை செய்ய கிடைத்த சந்தர்ப்பம் பயன்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இன்று அல்லது நாளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தான் இவ்வாறு ஆதரவு வழங்குவதனால் தனக்கு அமைச்சு பதவி ஒன்று கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும், தனது உறுப்பினர் பதவியில் வன்னி மக்களுக்கு சேவை செய்த சேவையைவிடவும் பாரியதொரு சேவையை செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இருவரும், கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முல்லைத்தீவை பிரதிநிதித்துவப்படுத்தும், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்ததாக குறித்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.