உங்களின் கோரிக்கைக்கு இணங்கி விட்டு நான் எப்படி கார்ல்டன் இல்லத்துக்குத் திரும்ப முடியும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம், புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
இருவருக்கும் இடையில் நடந்த முறைசாரா கலந்துரையாடலின் போதே, மகிந்த ராஜபக்ச இவ்வாறு கேள்வி எழுப்பியதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அமைவாக உள்ள- அதிகாரங்களை மத்திய அரசும், மாகாண அரசும் பகிர்ந்து கொள்ளும் வகையிலான, இணைந்த பொதுப் பட்டியலை (Concurrent List) நீக்க வேண்டும் என்று இரா.சம்பந்தன் கோரியிருந்தார்.
அப்போதே மகிந்த ராஜபக்ச, உங்களின் கோரிக்கைக்கு இணங்கி விட்டு நான் எப்படி கார்ல்டன் இல்லத்துக்குத் திரும்ப முடியும் என்று, கேள்வி எழுப்பியுள்ளார்.
என்னால், அரசியல் கைதிகளின் விடுதலையுடன் தொடர்புடைய, மாகாணசபைகளுக்கான காவல்துறை மற்றும் காணி அதிகாரங்கள் குறித்து விரிவான கலந்துரையாடலை நடத்த முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சம்பந்தனின் கோரிக்கை சமஷ்டியை கோருகிறது, அதனை வழங்க முடியாது என்றும் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
மகிந்த ராஜபக்சவை இரா.சம்பந்தன் கடந்த 30 ஆம் நாள் அவரது இல்லத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.