சுவையான இன்ஸ்டன்ட் பாதாம் கத்லி செய்யும் வழிமுறைகள்.!

வரும் நவம்பர் 6 தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளி பண்டிகைக்கு பெரும்பாலானவர்கள் முறுக்கு எனும் கார வகை பலகாரத்தை வீட்டில் செய்வதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். எனவே, இந்த வருடம் வித்தியாசமான பலகாரமான “இன்ஸ்டன்ட் பாதாம் கத்லி” வீட்டிலேயே சுவையாக எப்படி செய்வது என்று பார்ப்போம்

இன்ஸ்டன்ட் பாதாம் கத்லி செய்ய தேவையானவை:

பாதாம் பொடி ( மேல் தோலை நீக்கி, பொடி யாக்கவும்)- அரை கப்,

முந்திரிப் பொடி – அரை கப்,

பால் பவுடர் -கால் கப்,

பொடித்த சர்க்கரை – கால் கப்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீரை விட்டு அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும். அந்த பாத்திரத்தின் உள்பகுதியில் மற்றொரு பாத்திரத்தை வைத்து… அதில் பால் பவுடர், சர்க்கரை கலவையை வைத்து வறுக்கவும் (dry roast). பின்பு ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் பாதாம் பொடி, முந்திரிப் பொடி, டிரை ரோஸ்ட் செய்த சர்க்கரை பால் பவுடர் கலவை எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்துக் கலந்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்துக்கொண்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு பிசையவும்.

பின்னர், சப்பாத்தி கல்லில் பிளாஸ்டிக் பேப்பர் ஒன்றை வைத்து, அதன் நடுவில் நன்கு பதமாக பிசைந்து வைத்திருக்கும் மாவு கலவையை வைத்து, மற்றொரு பிளாஸ்டிக் பேப்பரால் அதை மூடி, குழவியால் அரை இஞ்ச் கனத்துக்கு அகட்டி, துண்டுகள் போடவும். பின்னர் அதனை எடுத்து மற்றவர்களுக்கு பரிமாறுங்கள்.