விமானநிலையத்திற்கு சென்றபோது நடந்த பரிதாபம்.!

கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்தவர் சூர்ய மூர்த்தி(வயது 60). இவர் தனது உறவினர் ஒருவர் வெளிநாடு செல்வதால் அவரை வழியனுப்புவதற்காக சென்னை விமானம் நிலையம் செல்ல இன்று அதிகாலை அவரது மனைவி சுநந்தா(வயது 55) மற்றும் அவருடைய உறவினர்கள் ராஜா(வயது 28), சுந்தரி(வயது 23) ஆகியோர் ஒரு காரில் நெய்வேலியில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்டனர்.

அந்த காரை கணேசன்(வயது 55) என்பவர் ஓட்டி வந்தார். அந்த கார் இன்று காலை 5 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த சித்தணி பகுதியில் வந்து கொண்டிருந்தது.

அப்போது சென்னையிலிருந்து அந்த வழியாக இரும்பு கம்பம் ஏற்றி கொண்டு லாரி ஒன்று வந்தது. அந்த லாரி திடீரென ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி தடுப்பு கட்டையில் மோதி சாலையின் மறுபுறம் சென்று அந்த வழியாக வந்த கணேசன் ஓட்டி வந்த காரின் மீதும் மோதியது.

இந்த விபத்தில் காரின் முன்பகுதி முற்றிலும் சேதம் அடைந்தது. இதில் காரில் பயணம் செய்த சூர்ய மூர்த்தி, சுநந்தா, ராஜா, சுந்தரி, கார் டிரைவர் கணேசன் ஆகிய 5 பேரும் பலத்த காயமடைந்தனர்.

இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த விக்கிரவாண்டி போக்குவரத்து காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயம் அடைந்த 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம் பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கபடுகிறது.

மேலும், இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.