மாப்பிள்ளைக்கு ‘பைக்’ எல்லாம் கிடையாது; ‘சைக்கிள்’தான் தருவோம் – பெண்வீட்டார்!

தற்போது இருக்கும் இந்த காலத்திலும் இன்னும் நிறைய பேர் வரதட்சணை கேட்பது என்பது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அப்போதைய சூழ்நிலையில் மாப்பிளை வீட்டார் சொம்பு கொடுத்தால்தான் தாலி கட்டுவேன்னு சொன்னாலும் தப்பில்லைன்னுதான் சொல்லுவாங்க.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஆண்களுக்கு பெண்கள் அவ்வளவு சுலபமாக கிடைப்பதில்லை. அதனால் ஆண்கள் சிலர் வரதட்சணை கேட்காமல் இருந்து விடுகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ்நாட்டில் ஒரு திருமணத்தில், மணமக்களுக்கு 5 லிட்டர் பெட்ரோல் பரிசாக வழங்கப்பட்டது. பெட்ரோல் விலை ஏறிக்கொண்டு செல்லும் நிலையில், பெட்ரோல் வழங்கி பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.

இதனைத்தொடர்ந்து, நாகை மாவட்டத்தில் குத்தாலம் அருகே உள்ள கோமல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன் என்பவருக்கும், மயிலாடுதுறை ஆனந்ததாண்டவபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யாவுக்கும் ஞாயிறு காலை திருமணம் நடைபெற்றது. மாப்பிள்ளையான ஐயப்பன் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.

இத்திருமணம் பெண்வீட்டார் கிராமத்தில் உள்ள மண்டபத்தில் நடந்தது.
திருமணத்துக்கு மணமகன் ஐயப்பன் சீதனமாக பைக் ஒன்று வாங்கி தருமாறு கேட்டிருக்கிறார். ஆனால் பெண் வீட்டார் பெட்ரோல் விலையின் காரணமாகவும், உடற்பயிற்சிக்கு உதவும் வகையில் சைக்கிள் ஒன்றை சீதனமாக வழங்கினார்கள். திருமணத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைக்கிளை சீதனமாக வழங்கியதாக பெண் வீட்டார், மாப்பிள்ளையிடம் கூறினார்கள்.