நாமலுக்கு சவால் விடுத்த சுமந்திரன்!

“கூட்டமைப்பு தமக்கு ஆதரவு வழங்கினால், அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிப்போம் என நாமல் ராஜபக்‌ச கூறுவதை விட, அவருடைய தந்தை பிரதமர் பதவியை ஏற்றுள்ளமையால், அரசியல் கைதிகளை முடிந்தால் இன்றைக்கே விடுதலை செய்யட்டும்” என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சவால் விடுத்துள்ளார்.

அப்படி செய்தால் நாம் அவர்களுக்கு ஆதரவளிப்பது பற்றிப் பரிசீலிப்போம் என்றும் அவர் கூறியுள்ளார். அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நாமல் ராஜபக்ச டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்நிலையிலேயே, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு சவால் விடுத்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,

“எத்தனை கோடி ரூபாய் கொட்டிக் கொட்டிக் கொடுத்தாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விலைபோகமாட்டாது என்று தெரிவித்துள்ள கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான புளொட் உறுப்பினரான வியாழேந்திரன் மரம் தாவியுள்ளார்.

அவருக்கு உரிய நடவடிக்கைகளை எமது கட்சி எடுக்கும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் எம்மால் உருவாக்கப்பட்டவர்களே.

எனினும், குறித்த இருவரும் தாம் ஏறிவந்த ஏணியை எட்டி உதைந்துள்ளார்கள்.

தன்னுடைய அரசியல் வாழ்க்கை, இந்தத் தடவையுடன் ஆறடி மண்ணில் குழிதோண்டிப் புதைக்கப்படும் என மைத்திரிபால சிறிசேன கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தெரிவித்திருந்தார்.

எனினும், தற்​போது மகிந்த ராஜபக்சவுன் கூட்டுச்சேர்ந்து, ஜனநாயகத்தை மீறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்” எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.