தமிழ்நாட்டின் கடலூரை சேர்ந்தவர் அழகேசன் (வயது 28), பூக்கடை நடத்தி வருகிறார். இவருக்கும் பண்ருட்டி அருகே உள்ள சேமக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ஆசைமுத்து மகள் ரஞ்சிதம் (வயது 24) என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
இதையொட்டி இரு வீட்டார்களும் உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்துவந்தனர். இவர்களது திருமணம் இன்று கடலூரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற இருந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் வெளியே சென்று வருவதாக தனது பெற்றோரிடம் மணமகள் ரஞ்சிதம் கூறி விட்டு சென்றார். அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை.
அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் பல இடங்களில் ரஞ்சிதத்தை தேடினர். உறவினர் மற்றும் தோழிகளிடம் விசாரித்தனர். ஆனால், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.இதுகுறித்து புதுப்பேட்டை காவல்துறையில் ரஞ்சிதத்தின் தந்தை ஆசைமுத்து முறைப்பாடு செய்தார். காவலர்கள் வழக்குப்பதிவு செய்து மாயமான ரஞ்சிதத்தை தேடினர். மணமகள் மாயமானதை அறிந்த மணமகன் அழகேசன் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
இன்று திருமணம் நடைபெற இருந்த கடலூர் தனியார் திருமண மண்டபத்துக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வந்தனர். மாயமான மணமகள் ரஞ்சிதத்தை இன்று காலை வரை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே திருமண மண்டபத்துக்கு வந்திருந்த உறவினர் ஒருவரிடம் அழகேசனுக்கு உங்கள் பெண்ணை திருமணம் செய்துதர விருப்பமா? என மணமகனின் பெற்றோர் கேட்டனர். அதற்கு அந்த பெண்ணின் பெற்றோரும் சம்மதித்தனர்.
இதைத்தொடர்ந்து உறவினர் மகளும் அழகேசனை திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து புதுமணப்பெண்ணை அலங்கரித்து மணமேடைக்கு அழைத்து வந்தனர். அழகேசன் அந்த மணப்பெண்ணின் கழுத்தில் குறித்த முகூர்த்த நேரத்தில் தாலிகட்டினார். திருமணத்துக்கு வந்திருந்தவர்கள் மணமக்களை வாழ்த்தினர். திடீரென மணப்பெண்ணாக மாறிய பெண்ணை அனைவரும் பாராட்டியுள்ளனர்.