தமிழில் நான் அவனில்லை, அரவான், துணை முதல்வர் ஆகிய படங்களில் நடித்தவர் ஸ்வேதா மேனன். மலையாளத்தில் முன்னணி நடிகையாக உள்ளார்.
ஜெயபாரதியின் ரதிநிர்வேதம் படத்தின் ரீமேக்கிலும் நடித்து இருந்தார். இந்தி படங்களிலும் வந்தார்.
இவர் பாபி போன்ஸ்லே என்பவரை முதலில் திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்து விட்டார்.
2-வதாக கேரளாவை சேர்ந்த ஸ்ரீவல்சன் மேனன் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு சபைனா என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் தனது முதல் திருமணம் பற்றி ஸ்வேதா மேனன் அளித்துள்ள பேட்டி வருமாறு:-
“நான் முதலில் பாபி போன்ஸ்லேவை திருமணம் செய்தது வாழ்க்கையில் செய்த பெரிய தவறு. யாருக்கும் அதுபோல் நடக்க கூடாது.
சினிமா மற்றும் மாடலிங் தொழிலுக்காக மும்பையில் இருந்தேன். பெற்றோர் நான்கு சுவற்றுக்குள் என்னை அடைக்காமல் சுதந்திரமாக விட்டனர். கட்டுப்பாடு எதுவும் இல்லாமல் வளர்ந்தேன்.
அதை பாபி தவறாக பயன்படுத்தினார். மும்பையில் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தால் தனியாகத்தான் இருப்பேன்.
தனிமைதான் பாபி மீது நான் காதலில் விழ காரணமானது. அந்த திருமணத்தில் அப்பாவுக்கு விருப்பம் இல்லை.
நான் அவரைத்தான் திருமணம் செய்வேன் என்று அடம்பிடித்ததும் அவர் இதை நினைத்து பிறகு வருத்தப்படுவாய் என்றார்.
அவர் சொன்னதுபோல் விவாகரத்து செய்து பிரிந்தேன். இப்போதும் நான் 2-வதாக திருமணம் செய்து கொண்ட கணவரை விவாகரத்து செய்யப்போவதாக வதந்திகள் வருகின்றன. இதை பார்த்து சிரிக்கிறேன்.”
இவ்வாறு ஸ்வேதா மேனன் கூறினார்.