சர்கார் படத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதிமுக அரசின் திட்டங்களை விமர்சித்தும், ஜெயலலிதாவை இழிவுபடுத்தியுள்ளதாகவும் கூறி முதலில் மதுரையில் தொடங்கிய போராட்டம், தற்போது தமிழக அளவில் அதிமுகவினரால் முன்னெடுத்து செல்லப்படுகிறது.
இது குறித்து பேசிய வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார்,
வியாபார நோக்கில் மட்டுமே எடுக்கப்பட்ட சர்கார் படம் அதிமுக அரசின் திட்டங்களையும், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது.
இது உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் மனதை புண்படுத்துவதாக அமைந்துள்ளது. வியாபார நோக்கத்திற்காக எதை வேண்டுமானாலும் எடுத்து படமாக்கலாம் என்று நினைத்துவிட்டார்கள் போல, இதனை ஜெயலலிதா பேரவை வன்மையாக கண்டிக்கிறது.
சர்ச்சைக்குள்ளான காட்சிகளை உடனடியாக நீக்கி விட வேண்டும். முதலில் சட்ட ரீதியாக அணுகி இந்த பிரச்சனையை எதிர்கொள்வோம்.
முடியவில்லை என்றால் எங்கள் உயிரை கொடுத்தாவது இதனை இப்பிரச்சனையை எதிர்கொண்டு அம்மாவின் புகழை காப்போம்.
அம்மா கொண்டுவந்த திட்டங்களை பற்றி விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஐ.நா சபை பாராட்டிய திட்டத்தை எல்லாம் இப்படி ஒரு திரைப்படத்தில் கொச்சைபடுத்துவது, அதிமுகவை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழினத்தையும் கொச்சை படுத்துவதாகும்.
காட்சிகளை நீக்க விட்டால் ஜெயலலிதா பேரவையின் மூலமாக சர்கார் பட குழுவினருக்கு தக்க பதிலடி கொடுப்போம்’ என்று பேசியுள்ளார்.