ஏழைகளின் வறுமையை பயன்படுத்தி அவர்களை கடத்தலுக்கு பயன்படுத்தும் கடத்தல்காரர்களின் வலையில் சிக்கிய ஒரு இளைஞன் கடுங்குளிரில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பிரான்சில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் எல்லையில் பொலிசார் ரோந்து செல்லும்போது குளிரில் சுயநினைவற்று கிடந்த ஒரு இளைஞனைக் கண்டனர்.
அண்டோரா நாட்டுக்கும் பிரான்ஸ் நாட்டுக்கும் இடையில் இருந்த எல்லைப்பகுதியின் அவன் கண்டுபிடிக்கப்பட்டதால், பொலிசார் உடனடியாக அண்டோரா மருத்துவமனை ஒன்றை தொடர்பு கொண்டு ஆம்புலன்சை அழைத்தனர்.
உடனடியாக அவன் ஹெலிகொப்டரில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் குளிரால் மோசமாக பாதிக்கப்பட்டிருந்த அந்த இளைஞனை காப்பாற்ற இயலவில்லை. அவன் hypothermia என்னும் பிரச்சினையால் உயிரிழந்தான்.
அவன் சுயநினைவற்றுக் கிடந்த பகுதிக்கு சற்று தொலைவில் சில சிகரெட் பண்டல்கள் கிடைத்தன.
எல்லைக்கப்பாலிருந்து சிகரெட் பண்டல்களை கடத்துவதற்காக சொற்ப தொகை தருவதாக ஆசை காட்டி அந்த இளைஞனை கடத்தல்காரர்கள் பயன்படுத்திக் கொண்டது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் பொலிசார், ஒருவரின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்ததற்காக கடத்தல்காரர்கள் மீது கொலைக்குற்றம் சாட்டி வழக்கு தொடர்ந்துள்ளனர். 20 வயதான அந்த இளைஞனிடம் அடையாள அட்டை எதுவும் இல்லாததால் அவனை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட அவனது உடலை பிணவறையில் வைத்திருந்தனர்.
பின்னர் அவனது பெற்றோர் எல்லை தாண்டி வந்து உடலை அடையாளம் காட்டிய பின்னரே அவன் யார் என்பது குறித்த விவரங்கள் தெரியவந்துள்ளது.
அவன் அல்ஜீரியா நாட்டைச் சேர்ந்த இளைஞன். சிகரெட் கடத்தினால் பணம் தருவதாக ஆசை காட்டியதால், அவன் தன் உயிரை பணயம் வைத்து ஸ்பெயினுக்கும் பிரான்சுக்கும் இடையில் உள்ள Pyrenees மலைத்தொடர் வழியாக சிகரெட் கடத்த முயன்றதும், கடத்தல்காரர்களிடம் சிகரெட் பாக்கெட்களை ஒப்படைக்க முயன்ற போது ராணுவ வீரர்கள் வருவதைக் கண்டதும் அவனை விட்டு விட்டு அவர்கள் ஓடி விட்டதும், திடீரென பனி பெய்ததால் குளிர் தாங்க முடியாமல் சுயநினைவற்று அவன் விழுந்து கிடந்ததும் தெரிய வந்துள்ளது.