விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கும், அரசு தேர்வுகளில் சாதனை படைத்த பள்ளி மாணவர்களுக்கும் பரிசளிப்பு விழா நடந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா இந்த விழாவிற்கு முன்னிலை வகித்தார். தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பங்கேற்று பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
பின்பு அவர் பேசுகையில், இன்னும் தமிழகம் பெரிய பொருளாதார வளர்ச்சியை எட்டவில்லை. இலவச திட்டங்கள் வேண்டாம் என்று சொல்பவர்களுக்கு எல்லா வசதிகளும் இருக்கும்.
ஏழை எளியவர்களுக்கு, இல்லாதவர்களுக்கு, பாட்டாளி, படைப்பாளிகளுக்காகதான் எங்களது அரசாங்கம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. 1 1/2 மணி நேரம் ஓடும் திரைப்படத்தில் இலவச பொருட்களை தூக்கி வீசி எரிந்தால் கை தட்டலாம். பசி பட்டினியோடு இருக்கும் குடும்பங்களுக்கு அவர்களால் பதில் கூற முடியாது.
எங்களது அரசாங்கம் பணக்காரர்களுக்கு செயல் படவில்லை. எங்களது அரசாங்கம் ஏழைகளுக்கு தான் செயல்பட்டு வருகிறது. ஒருநாள் முதலமைச்சர் சினிமாவில் வேண்டுமானால் ரசித்து பார்க்கலாம். நடைமுறைக்கு என்றும் ஒத்துவராது. சினிமா வேறு நடைமுறை வாழ்க்கை என்பது வேறு என்று அவர் பேசினார்.