கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின்போது தமது தரப்பினரை படுகொலை செய்ய முயற்சித்தார்கள் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அதிரடியாகக் கூறியுள்ளார்.
அத்துடன் ஒன்றிணைந்த எதிரணியாக செயற்பட்டிருந்த தமக்கு அரசாங்கத்தை விரைவாக கவிழ்ப்பதும், ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதுமே பிரதான திட்டமாக இருந்ததாகவும் அவர் கூறினார்.
”கடந்த அரசாங்கத்தை கவிழ்த்துவிட்டு மக்கள் தீர்ப்புக்கு செல்ல வேண்டும் என்பதே எமது திட்டமாக இருந்தது.
நாம் எடுத்திருக்கும் இந்த தீர்மானம் தவறா? சரியா? என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் மக்களிடமே இருக்கிறது.
மக்களுக்குள்ள இந்த அதிகாரத்தை நீதிமன்றத்தால் கூட சவாலுக்குட்படுத்த முடியாது. அவ்வாறு செய்யப்படுமாயின் எமது நாட்டு இறைமைக்கு எதிரானது, அது மக்களுக்கு எதிரான செயற்பாடாக அமையும்.
ஜனநாயகத்தை நிலைநிறுத்துவது தேர்தலாகும். தேர்தல் என்றால் ஏன் அச்சப்படுகிறார்கள் என்று எனக்கு தெரியாது. எங்களுக்கு தேர்தல் குறித்த அச்சம் கிடையாது.
தேர்தலுக்கு முகங்கொடுக்க நாம் தயாராக இருக்கிறோம். தேர்தலில் கண்டிப்பாக வெற்றிபெறுவோம்.” எனவும் மஹிந்த தெரிவித்தார்.
இதேவேளை ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த பிரதமர், தான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து புதிய கட்சியான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்திருப்பதாக தெரிவித்தார்.