நாளை மோடி தொடங்கவுள்ள புதிய திட்டம்.!

பிரதமர் நரேந்திர மோடி உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இருக்கும் தனது நாடாளுமன்ற தொகுதியான வாரணாசியில் நாளை சுற்றுப்பயணம் செய்து பல்வேறு புதிய திட்டங்களை துவங்கி வைக்கிறார்.

தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து வாரணாசிக்கு வரும் பிரதமர் மோடி 1,571.95 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள வாரணாசி நாற்கர விரைவு நெடுஞ்சாலை மற்றும் பாபத்பூர்-வாரணாசி நெடுஞ்சாலைகளை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.

மேலும், உலக வங்கியின் நிதி பங்களிப்புடன் 5,369.18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மத்திய அரசின் ஜல் மார்க் விகாஸ் திட்டத்தின்கீழ் அமைந்திருக்கும் இந்தியாவின் முதல் உள்நாட்டு நீர்நிலை கப்பல் போக்குவரத்து திட்டத்தையும் மோடி துவங்கி வைக்கிறார்.

இந்திய நீர்வழி-1 என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த திட்டத்தின்படி ஹல்தியா-வாரணாசி இடையில் கங்கை ஆற்றில் சுமார் 2 ஆயிரம் டன் எடையுடன் சரக்கு கப்பல்கள் சென்று வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது. படிப்படியாக இந்த திட்டம் சாஹிப்கஞ்ச், ஹல்தியா, வாரணாசி ஆகிய பகுதிகளில் 3 சரக்கு முனையங்கள் அமைத்து விரிவாக்கம் செய்யப்படும்.

மேலும், வாஜித்பூர் பகுதியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு மோடி உரையாற்றுகிறார்.