நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, டிடிவி தினகரன் ஒரு துரோகி எனவும் அவர் அதிமுகவை உடைக்க சதி செய்து கொண்டிருக்கிறார் எனவும் குற்றம் சாட்டினார்.
மேலும், ஜெயலலிதாவின் உழைப்பால் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் உருவாக்கப்பட்டதாகவும் ஆட்சிக்கு துரோகம் செய்த 18 பேருக்கும் தகுதி நீக்கம் இறைவன் அளித்த தண்டனை எனவும் கூறினார்.
இதனையடுத்து, அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று தேனி மாவட்டம், போடியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், யார் துரோகி என்பது தமிழக மக்களுக்கு தெரியும். மக்கள் விரும்பாத திட்டங்களை கொண்டு வருகிறார்கள். சுயநலமாக ஆட்சி நடத்துகிறார்கள்.
ஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைத்தது போல், உண்ட வீட்டுக்கே துரோகம் செய்தது போல், தன்னை முதல்-அமைச்சர் ஆக்கியவருக்கு பதவிவெறியில் துரோகம் செய்து விட்டு யாருக்கோ அடிமை சேவகம் செய்வது யார் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும்.
மக்கள் துரோகி யார் என்பதும், அம்மாவின் தொண்டர்களின் துரோகி யார் என்பதும் தெரிந்த மக்கள், தேர்தல் வரும்போது அவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள் என கூறினார்.