பிரபல திரைப்பட நடிகரும், இயக்குனருமான கவுதமன் ரஜினி தேர்தலில் நின்றால் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என்று அதிரடியாக கூறியுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலில் வருவதற்கான வேலைகள் எல்லாம் மும்பரமாக நடைபெற்று வருகின்றன. ஆனால் அவர் எப்போது தன்னுடைய கட்சியின் பெயரை அறிவிப்பார் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பலரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் நடிகரும், இயக்குனருமான கவுதமன் இன்று அரசியல் கட்சியை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் இளைஞர்களின் போராட்டம் எப்படி வெற்றி பெற்றதோ, அதே போன்று அரசியலிலும் இளைஞர்கள் வென்றெடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் அரசியல் அமைப்பை துவங்குகிறோம்.
கட்சியின் பெயர் மற்றும் கொடி, பொங்கலுக்கு பின்னர் நடைபெறும் மாநில மாநாட்டில் அறிவிக்கப்படும். தமிழ் மொழியை, தமிழர் பண்பாட்டை அழிக்க எவர் வந்தாலும் அவர்கள்தான் எங்கள் எதிரிகள் என்று கூறினார்.
மேலும் தற்போது இருக்கும் அரசியலில் ரஜினியும், கமலும் களத்தில் இருக்கின்றனர். அவர்களை நாங்கள் திரைக்கலைஞர்களாக மிகப் பெரிய அளவில் மதிக்கிறோம்.
ஆனால் அரசியல் களத்தில் அவர்களை எதிர்ப்போம். எங்களைப் போன்று தமிழர்களுக்காக, தமிழர் நலனுக்கு ஆதரவாக காவல்துறை அடக்குமுறையை எதிர்த்து அவர்களால் சிறைக்குச் செல்ல முடியுமா என்ற கேள்வியை எழுப்பினார்.
நடிகர் ரஜினிகாந்த் தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிட நின்றாலும் அவரை எதிர்த்து போட்டியிடுவேன். எங்கள் இனத்தை, மொழியை காக்கவும், எங்கள் உரிமையை நிலைநாட்டுவதற்காகவும் அரசியல் இயக்கம் தொடங்குகிறோம் என்று முடித்தார்.
புதிதாக அரசியல் கட்சி துவங்கியவர்களும், அரசியல் கட்சியில் இருப்பவர்களும், இதுவரை ரஜினியை எதிர்த்து போட்டியிடுவேன் என்று கூறியதாக தெரியவில்லை, அந்த வகையில் பார்த்தால் கவுதமன் தான் முதன் முதலில் ரஜினியை எதிர்த்து போட்டியிடுவேன் என்று கூறிய அரசியல்வாதி ஆவார்.