இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து ரணில் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ரணிலின் ஐக்கிய ஜனநாயக கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் 10 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
இலங்கை நாடளுமன்றம் கடந்த சில தினங்களுக்கு முன் நள்ளிரவில் கலைக்கப்பட்டது, இலங்கை பிரதமராக பதவி வகித்து வந்த ரணில் விக்கிரமசிங்க கடந்த மாதம் 26 ஆம் தேதி அதிபர் மைத்திரிபால சிறிசேனவால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து தமிழ் இனப்படுகொலைக்கு காரணமான ராஜபக்சே இலங்கையின் புதிய பிரதமாராக நியமிக்கப்பட்டார். இதற்கு அந்நாட்டு தமிழ் அரசியல் கட்சிகள் உட்பட சர்வதேச அளவில் இருந்து கடும் எதிர்ப்பலை கிளம்பியது. அதே நேரம் சபாநாயகர் கரு.ஜெயசூர்யா ராஜபக்சாவுக்கு பெரும்பாண்மை இல்லை என்றும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் வரையில் ரணில் பிரதமராக தொடர்வார் என்றும் கூறினார். இதனை சர்வதிகார நோக்கில் எதிர்கொள்ள நினைத்த அதிபர் மைத்திரி நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க விடாமல் நவம்பர் 16 வரை நாடாளுமன்றத்தை முடக்கி வைப்பதாக உத்தரவிட்டார்.
இதற்கு ஐ.நா சபை கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஒரு ஜனநாயக ஆட்சி நடைபெறும் நாட்டில், சர்வாதிகார போக்கு கடைபிடிப்பதை தங்களால் கண்டும் காணாமலும் இருக்க முடியாது என்று எச்சரித்தது. சர்வதேச அளவில் நெருக்கடி, தமிழ் கட்சிகள் ராஜபக்சாவுக்கு ஆதரவு தர மறுப்பு போன்ற காரணங்களால் இலங்கை அரசியலில் தொடர் குழப்பநிலை நீடித்து வந்தது. இந்த நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. மேலும் ஜனவரி ஐந்தாம் தேதி தேர்தல் நடைபெறும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் இன்று ரணில் விக்ரமசிங்கே மனு தாக்கல் செய்தார். ரணிலின் ஐக்கிய ஜனநாயக கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட 10 மனுக்கள் தற்போது தாக்கல் செய்யப்பட்டது.
இதனிடையே நேற்று இலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியில் இணைந்தார் மகிந்த ராஜபக்ச.மகிந்த ராஜபக்சவுடன் முன்னாள் எம்.பி. 50 பேரும் இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் நேற்று இணைந்தனர். இதனால் மைத்ரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திரக் கட்சிக்கு பின்னடைவு ஏற்படும் என தகவல் வெளியாகி உள்ளது
இலங்கை அரசியலில் அடுத்தடுத்து மாற்றங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. ஆனால் அங்குள்ள தமிழர்களின் நிலைதான் மாறாமல் அப்படியே இருக்கிறது. எப்போது தான் மாற்றுமோ தமிழர்களின் நிலை.