வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக மாறியதாக வானிலை மையம் நேற்று அறிவிப்பை வெளியிட்டது.
வங்கக் கடலில் உருவாகி இருக்கும் இந்த புயலுக்கு கஜா என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. வங்க கடலில் நிலை கொண்டு இருக்கும் கஜா புயலானது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் இந்த புயல் நகரகூடும். எனவே அடுத்து வரும் 4 நாட்களுக்கு நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.
குறிப்பாக நவம்பர் 14 மற்றும் 15 தேதிகளில் வாட தமிழகத்தில் கனமழை பெய்ய கூடும். இந்த புயலானது அடுத்த 3 நாட்களில் தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல் வரும் 15-ம் தேதி வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயலானது கடலூர் – ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கஜா புயல் காரணமாக, நாளை முதல், தமிழகம் மற்றும் ஆந்திராவின் கடலோர பகுதிகளில் மணிக்கு 90 முதல் 100 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இது தொடர்பாக தமிழக மீன்வளத்துறை சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில், “அனைத்துக் கடலோர மற்றும் உள்நாட்டு மீன்துறை இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் மற்றும் மீன்துறை உதவி இயக்குநர்களுக்கு கஜா புயல் தொடர்பாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டு, மீனவர்களைப் பத்திரமாக கரைதிரும்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்ற சென்னை மீன்பிடி துறைமுகத்தைச் சேர்ந்த 160 தங்குகடல் மீன்பிடி விசைபடகுகளை பத்திரபடுத்திடவும், பாதுகாக்க கரை திரும்ப அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அனைத்து கடலோர மாவட்டங்களிலும் மறு உத்தரவு வரும் வரை மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
புயல் மற்றும் இயற்கை இடர்பாடுகளை உடனுக்குடன் மீனவர்களுக்கு வழங்கிட ஏதுவாக மீன்துறை இயக்குநர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை கட்டுபாட்டு அறை உருவாக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் அனைவரும் அலைபேசி மூலம் பேரிடர் மேலாண்மை கட்டுபாட்டு அறையை தொடர்புகொண்டு விவரங்களைக் கேட்டுக்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.