என் அம்மாவை காணவில்லை.. ராமதாஸ் கண்டுபிடித்துத் தரவேண்டும்!

வன்னியர் சங்க முன்னாள் தலைவர் மறைந்த காடுவெட்டி குருவின் மகன், கனலரசன், தனது தாயார் (சொர்ண)லதாவை, அவரது உறவினர்கள் மிரட்டி எங்கோ அடைத்து வைத்திருப்பதாகவும் அவரை மீட்க பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உதவ வேண்டும் என்றும் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பா.ம.க.வின் ஆணிவேர் என்று கருதப்படும் வன்னியர் சங்கத்தின் தலைவராக செல்வாக்குடன் வலம் வந்தவர் காடுவெட்டி குரு. அக்கட்சியினராலும் வன்னியர் சங்கத்தினராலும் மாவீரன் என்று அழைக்கப்பட்டவர். சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், காடுவெட்டி குருவை தனது மகன் போன்றவர் என்று பலமுறை கூறியிருக்கிறார். ஆனால் ராமதாசின் மகனும், பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணிக்கும் இடையல் மனக்கசப்பு உருவானதாக ஒரு தகவல் உலவியது.

இந்த நிலையில் உடல் நலக்குறைவார் காடுவெட்டி குரு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது மருத்துவ செலவுக்கு பா.ம.க. உதவவில்லை என்று ஒரு விமர்சனம் எழுந்தது. ஆனால் இதை பா.ம.க.வினர் மறுத்தனர்.

இந்த நிலையில், “காடுவெட்டி குரு மறைந்த நிலையில் வீட்டுக்கடன் கட்ட முடியாத அளவுக்கு பண நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆகவே காடுவெட்டி குரு பயன்படுத்திய வாகனத்தை விற்க இருக்கிறோம். வாங்க விரும்புகிறவர்கள் அணுகவும்” என்று காடுவெட்டி குருவின் அக்காள் மகன், தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதே நேரம், பா.ம.க. தரப்பில் இருந்து காடுவெட்டி குரு குடும்பத்துக்கு உதவப்போவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் காடுவெட்டி குருவின் மனைவி (சொர்ணலதா) ஒரு கடிதம் எழுதியதாக முகநூலில் சிலரால் பதிவிடப்பட்டது. அதில், “என் கணவர் காடுவெட்டி குரு மறைந்த பிறகு, திக்குதிசை தெரியாமல் தவிக்கிறேன். என் மகள் விருதாம்பிகை, மகன் கனலரசன் ஆகியோரைக்கூட பார்க்கமுடியவில்லை. எங்களது சொத்துக்காக எங்களை ஏதாவது செய்துவிடுவார்களோ என்று பயமாக உள்ளது. அய்யா (பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்)தான் எங்களுக்கு நல்லவழி காட்டவேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

(சொர்ண)லதா எழுதியதாக சமூகவலைதளங்களில் பரவிய கடிதம்..

இந்த நிலையில் காடுவெட்டி குருவின் மகன் கனலரசன், தனது முகநூல் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில், தனது தாயாரை பல நாட்களாக காணவில்லை என்றும். அவரது உறவினர்கள் அவரை பலவந்தமாக எங்கோ அடைத்துவைத்திருக்கிறார்கள் என்றும் அவரை மீட்க பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உதவ வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த வீடியோவில் கனலரசன் பேசியுள்ளதாவது:

“எல்லாருக்கும் வணக்கம். நான் மாவீரன் (காடுவெட்டி குரு)மகன் கனலரசன். எல்லாருக்கும் தெரியும் எங்க அம்மா எழுதினமாதிரி ஒரு கடிதத்தை( முகநூலில்) சிலர் பதிவிட்டிருந்தார்கள். அந்த கடிதத்தில் இருப்பது பொய்யான செய்தி என்று நானும் பதிவிட்டிருந்தேன். சிலர் என்னை பேக் ஐடி என்று கமெண்ட் செய்திருந்தார்கள்.

அதனால்தான் நான் இந்த வீடியோவை வெளியிடுகிறேன்.

எல்லாருக்குமே தெரியும் எங்க அப்பா இறந்த்தில் இருந்து எங்க அம்மா மிகவும் மன வருத்தத்தில் இருந்தார்கள். எங்க அம்மாவுக்கு ஆறுதலாக இருக்கும் என்று அவரது பிறந்தவீட்டுக்கு அனுப்பிவைத்தேன். சென்ற இடத்தில் என்ன ஆனது என்று தெரியவில்லை… என் அம்மாவின் கால் உடைந்துவிட்டது. அவர் எதிர்பாராமல் விழுந்து காலை உடைத்துக்கொண்டாரா.. அல்லது அவரது உறவினர்கள் யாராவது தள்ளிவிட்டு கால் உடைந்ததா என்பது எனக்கு இன்னமும் சந்தேகமாகத்தான் இருக்கிறது.

ஏனென்றால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகு அவரை நான் சந்திக்கச் சென்றபோதெல்லாம் அவரது உறவினர் எங்களை சரியாக பேச விடவில்லை. அவர் பதட்டமாகவே என்னிடம் பேசுகிறார்.

சமீபத்தல் அப்பாவுக்கு தீபாவளி துக்கம் கடைபிடிக்க அம்மாவை அழைக்க சென்றிருந்தேன். அப்போதும் அவர் பதட்டமாகவே இருந்தார். மேலும், தற்போது தான் வரும் நிலையில் இல்லை என்றும் கூறினார். என்ன பிரச்சினை என்று நான் கேட்கும்போதும் அவர் சரிவர பதில் சொல்லவில்லை. அப்போதும் அவரது உறவினர்கள் சூழ்ந்துகொண்டு என் அம்மாவை பேசவிடவில்லை. சரி, எப்படியும் அம்மா வந்துவிடுவார் என்று நான் திரும்பினேன். ஆனாலும் அடுத்து, ஊர் பெரியவர்களை வைத்து அம்மாவிடம் பேசிப்பார்த்தேன். அப்போதும் அவர் ஊருக்கு வரவில்லை என்றே தெரிவித்தார்.

பிறகு இன்று பள்ளியில் (பெற்றோர் கூட்டம்) இருக்கிறது என்று பொய் சொல்லி அம்மாவிடம் தனியாக பேச வேண்டும் என்று சொல்ல திட்டமிட்டேன்.

என் அம்மா அரும்பாக்கத்தில் அவரது அண்ணன் பெண் வீட்டில்தான் இருந்தார். அங்கு சென்றேன். ஆனால் அவர் அங்கு இல்லை.அந்த குடும்பத்தினர், என் அம்மா ஒரு வாரத்துக்கு முன்பே திண்டிவனம் சென்றுவிட்டதாக கூறினார்கள். உடனே என் அம்மாவின் அண்ணனுக்கு அலைபேசியில் பேசினேன். அவர், தான் பாண்டிச்சேரியில் இருப்பதாக கூறினார்.

பிறகு (என்) வீட்டில் இருப்பவர்களை அலைபேசியில் தொடர்புகொண்டு என் அம்மா குறித்து விசாரித்தேன். அவர்கள் என் அம்மா, வீட்டில்தான் இருக்கிறார் என்றார்கள். “சரி.. அவரிடம் போனை கொடுங்கள்” என்றேன். ஆனால் யாரும் கொடுக்கவில்லை. நான், “என் அம்மாவிடம் ஒரு வார்த்தையாவது பேசிக்கொள்கிறேன். அவர் அங்குதான் இருக்கிறார்களா என்பது எனக்குத் தெரிய வேண்டும்” என்று எவ்வளவோ சொல்லியும் போனை என் அம்மாவிடம் கொடுக்கவே இல்லை.

“இரு.. போனை கொடுக்கிறேன்..” என்றவர்கள் பிறகு, “உன் அம்மா உன்னிடம் பேச விரும்பவில்லை” என்றார்கள்.

ஒரு வாரமாகவே இதே நிலைதான். என் அம்மாவை எங்கே வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.. இப்போது நான் என்ன செய்வது என்று புரியவில்லை.

இன்னொரு விசயம்.. என் அம்மா எழுதியதாக ஒரு கடிதத்தை யாரே வெளியிட்டார்கள். ஆனால் என் அம்மாவுக்கு எழுதப்படிக்கத் தெரியாது. இதை அனைவரும் அறிவார்கள். என் அம்மாவை மிரட்டி அவரது உறவினர்கள் கடிதம் வாங்கியிருக்கிறார்கள்.

கடைசியாக என் அம்மாவை (மருத்துவமனையில்) நேரில் சந்த்தித்து வீட்டுக்கு வரும்படி நான் கூறியபோது, விட முடியாது என்று அவரது உறவினர்கள் கூறினார்கள்.

இப்போது என் அம்மா எங்கே இருக்கிறார்கள்.. எப்படி இருக்கிறார்கள் என்பது கூட எனக்குத் தெரியவில்லை..

அய்யா (மருத்துவர் ராமதாஸ்)தான் என் அம்மாவை கண்டுபிடித்து என் வீட்டுக்கு (காடுவெட்டிக்கு) அனுப்பி வைக்க வேண்டும்” – இவ்வாறு கனலரசன் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

பா.ம.க.வினர் மற்றும் வன்னியர் சங்கத்தினரால் மாவீரன் என்று கொண்டாடப்பட்ட ஒருவரின் மகன், தனது தாயைக் காணவில்லை என்று பரிதாபமாக வீடியோ வெளியிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.