திருமணம் ஆனதையே மறந்துபோன பெண்: தவறான சிகிச்சையால் நடந்த விபரீதம்

நாகர்கோவில் மாவட்டத்தில் ஐஸ்வர்யா என்ற கர்ப்பிணிக்கு செய்யப்பட்ட தவறான அறுவை சிகிச்சையால் தனக்கு திருமணம் ஆனதையே மறந்துள்ளார்.

ஐஸ்வர்யா – வரதராஜன் அகிய இருவருக்கும் கடந்த ஜனவரி 22ம் தேதி திருமணம் நடைபெற்றது. ஐஸ்வர்யா நிறைமாத கர்ப்பமாக இருந்தார். கடந்த அக்டோபர் 26ம் தேதி ஐஸ்வர்யாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. பட்டமங்கல வீதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்த ஐஸ்வர்யாவுக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது.

திடீரென ஐஸ்வர்யா கோமா நிலைக்கு சென்றார். அறுவை சிகிச்சையின் போது மயக்க மருந்து அதிகமாக கொடுத்ததால் தான் அவர் கோமா நிலைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

பின்னர் ஐஸ்வர்யாவை தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தவறான அறுவை சிகிச்சையால் நுரையீரல் மற்றும் இதய கோளாறு ஏற்பட்டு நரம்பு மண்டலத்தை பாதித்துள்ளது என்றும், 3 நாட்கள் வரை உத்தரவாதம் அளிக்கமுடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக மயிலாடுதுறைக்கு சென்று தனியார் மருத்துவமனை டாக்டரிடம் உறவினர்கள் கேட்டதற்கு, ஐஸ்வர்யாவின் மருத்துவ செலவை நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்று கூறி உள்ளனர்.

இதுவரை ரூ.7.50 லட்சம் செலவுசெய்யப்பட்ட நிலையில் சில நாட்களுக்கு முன் சிகிச்சையிலிருந்து எழுந்த ஐஸ்வர்யா, தனக்கு குழந்தை பிறந்ததையும், திருமணமானதையும் மறந்த நிலையில் உள்ளார்.

ஐஸ்வர்யாவின் உறவினர்கள் தனியார் மருத்துவமனைக்கு சென்று நியாயம் கேட்டதற்கு, இவ்வளவு தொகை நாங்கள் தர முடியாது என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஆத்திரமடைந்த தாய் மாலா மற்றும் அவரது உறவினர்கள் நேற்று மதியம் மயிலாடுதுறை தாசில்தார் விஜயராகவன் மற்றும் ஆர்டிஓ அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.