யாழ் தென்மராட்சி நுணாவில் எரிபொருள் நிலையத்திற்கு அருகாமையில் நேற்றிரவு இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞன் ஒருவர் ஸ்தலத்தில் பலியானதுடன், இன்னுமொருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது, இரவு ஏழு மணியளவில் வீதியில் வேகமாக சென்ற மோட்டார் சைக்கின் எதிரில் வந்த டிப்பர் வண்டியுடன் மோதியுள்ளது. வேகக் கட்டுப்பாட்டை இழந்ததினாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .
சம்பவத்தில் தச்சன் தோப்பு பிரதேசத்தைச் சேர்ந்த மதன் என்பவர் வயது ( 27) சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார் . இவருடன் சென்ற இளைஞன் படுகாயமடைந்த நிலையில், யாழ் போதனா வைத்தியசசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
அண்மைக்காலமாக யாழ் குடாநாட்டில் வேகமாக இடம்பெற்று வரும் இவ்வாறான திடீர் விபத்துக்களினால், அநியாயமாக இளைஞர்கள் பலரும் உயிரிழந்து வருகின்றமை மிகவும் கவலைக்குரிய விடயமாகும். மேலும், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.