மதுரை மாவட்டம் பாலமேடு அருகே சத்திரவெள்ளாளபட்டி கிராமத்தின் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவரும், மு.க. அழகிரியின் ஆதரவாளருமான மதுரை வீரன் இன்று அதிகாலையில் அவர் வீட்டருகிலேயே வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
டீ குடிக்க வீட்டிற்கு வெளியில் வந்து, நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது தெருமுனையில் நின்றிருந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் வெட்டி சாய்த்துள்ளது.
இதில் நிலைகுலைந்த வீரன் சம்பவ இடத்திலேயே பலியானார். 2 மாதங்களுக்கு முன்பு, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி தலைமையில் இவரின் மகளுக்கு திருமணம் நடைபெற்றது.
இவ்விழாவில் வாழ்த்திய அழகிரி, மதுரை வீரன் போன்ற வீரர்கள் என்னுடன் இருக்கும்போது என்னை யாரும் அசைக்க முடியாது என்று கூறினார்.
இந்நிலையில், இவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் அழகிரியிடம் இருந்து பிரிந்து திமுகவில் இணைந்தார்.
அதுபோக சில பெண்களுடன் தவறான முறையில் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டு வந்தது. அந்த பேச்சு உலா வந்து கொண்டிருக்கும் நேரத்தில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது.
இந்த கொலையில் ஈடுபட்டது வீரனின் உறவினர்கள் தரப்பு தான் எனபது காவல் துறையினர் நடத்திய விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
இதனை தொடர்ந்து மேற்கொண்டு விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர். அழகிரியின் ஆதரவாளராக இருந்தவர், திமுகவில் இணைந்த சில வாரங்களில் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது மதுரையில் அரசியல் பதற்றத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.