மைத்திரிக்கு கூட்டமைப்பு விடுத்த அன்பு கட்டளைகள்? விளைவுகள் பாரதூரமானவை என எச்சரிக்கை!

உள்நாட்டு ரீதியாக இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிகள் அனைத்தும் அடைபட்டுப்போயுள்ளன. சர்வதேச ரீதியாகவே இந்த இனப்பிரச்சினை தொடர்பான விடயத்தை கொண்டு செல்லவேண்டியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

இன்னும் இருபத்திரண்டு மாதங்கள் நாடாளுமன்றத்திற்கான காலம் இருந்தும் குறைகாலத்தில் ஜனாதிபதி தன்னுடைய சுயநல அடிப்படையில் இதனை கலைத்திருக்கின்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐந்து வருட காலத்திற்கென தெரிவு செய்யப்படுகின்றவர்களாவர்.

ஐந்து ஆண்டுகளுக்கு இந்த கட்சியிலிருந்து பணி செய்ய வேண்டும் என்பதற்காக மக்கள் ஆணையை தந்திருக்கின்றனர்.

அந்த அடிப்படையில் இருக்கின்ற 22 மாதங்களுக்குள் இன்னும் பல வேலைகளை செய்யலாம் என்ற எண்ணம் இருந்தது.

எதிர்பாராத விதமாக ஜனாதிபதியால் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டு பின்னர் கலைக்கப்பட்டிருக்கின்றது. இந்த செயலானது ஜனநாயக படுகொலைக்கு ஒத்த செயலாகும்.

ஒரு நல்லாட்சி நாட்டில் ஏற்பட வேண்டும் என்பதற்காகவே நாம் எல்லோரும் இணைந்து இந்த ஜனாதிபதியை தெரிவு செய்திருந்தோம்.

நல்லாட்சியை ஏற்படுத்த வேண்டும், இனப்பிரச்சினையை தீர்க்க வேண்டும், கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படவேண்டும், படையினரால் கபளீகரம் செய்யப்பட்ட காணிகள் விடுவிக்கப்பட வேண்டும், அபிவிருத்திகள் செய்யப்படவேண்டும் என்றெல்லாம் இவருக்கு பல அன்புக் கட்டளைகளை இட்டு நாம் ஜனாதிபதியாக தெரிவு செய்திருந்தோம்.

மைத்திரிபால சிறிசேன அவர்களை நாம் ஜனாதிபதியாக தெரிவு செய்ததோடு மகிந்த ராஜபக்ச அவர்களை நாம் நிராகரித்திருந்தோம்.

எவரிடமும் கேட்காமல் தன்னுடைய விருப்பத்தின் அடிப்படையில் மகிந்த அவர்களை பிரதமராக்கியிருக்கின்றார். இது யாப்பிற்கு முரணானது என்றும் ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்ட சவால் என்றும் சொல்லப்படுகின்றது.

225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலைவிதியை தனிமனிதனான ஜனாதிபதி தீர்மானிக்கின்றார் என்றால் இதுவே சர்வாதிகாரம் என்று சொல்லப்படும்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனிப்பட்ட தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படுகின்றனர். ஐந்து வருடங்கள் பணியாற்றுங்கள் என அவர்களுக்கு மக்கள் ஆணை வழங்கியிருக்கின்றனர்.

ஆனால் மூன்று வருடங்களும் இரண்டு மாதங்களும் முடிவடைந்திருக்கும் நிலையில் தனது சுய விருப்பத்திற்கு அமைய சுயநல அடிப்படையில் ஜனாதிபதி இந்த வேலையை செய்திருக்கின்றார்.

இது கண்டிக்கத்தக்க விடயமாகும். ஜனநாயக பற்றாளர்கள் எல்லோரும் இந்த செயலை கண்டிக்கின்றனர். உலக நாடுகளில் ஒன்றுகூட புதிய பிரதமரை வாழ்த்தவுமில்லை, வரவேற்கவுமில்லை. இந்த நியமனம் பிழையானதாகும்.

பத்தொன்பதாவது அரசியல் திருத்தத்தின் மூலமாக ஜனாதிபதிக்கு இருந்த பல அதிகாரங்கள் பறிக்கப்பட்டுவிட்டது. பிரதமரை நியமிக்கின்ற அதிகாரம் அவருக்கு இருக்கின்றதே தவிர பிரதமரை பதவி நீக்குகின்ற அதிகாரம் அவருக்கு இல்லை. நாடாளுமன்றத்தை திடீரென கலைக்கக்கூடிய அதிகாரம் அவருக்கு இல்லை.

225 நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒருகோடிக்கு மேற்பட்ட மக்கள் வாக்களித்து தெரிவு செய்திருக்கின்றனர். ஜனாதிபதியை பொறுத்தமட்டில் அவருக்கு 62 இலட்சம் மக்கள் மாத்திரம் வாக்களித்திருக்கின்றனர்.

சட்டமன்றம் என்பது தனியான துறையாகும். தனியான துறையை தனிப்பட்ட ஒரு நபர் சர்வாதிகார ரீதியாக கலைத்திருப்பது வேடிக்கையான ஜனநாயகமாக இருக்கின்றது.

62 இலட்சம் மக்கள் ஜனாதிபதியை நம்பி வாக்களித்திருக்கின்றனர். அவரை நம்பி ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்திய ரணில் விக்ரமசிங்க, சந்திரிக்கா அம்மையார், சோபித தேரர், எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் போன்ற எவருக்குமே தெரியாமல் அவர் செய்த இந்த செயலானது கண்டிக்கத்தக்க விடயமாகும். இதற்கான தீர்ப்பினை மக்கள் ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அரசியல் யாப்பு சட்டத்திற்கு முரணான அவருடைய செயற்பாட்டின் விளைவு எவ்வாறு அமையப்போகின்றது என்பதை நாங்கள் சிந்திக்கவேண்டியிருக்கின்றது.

இனப்பிரச்சினைக்கான தீர்வு ஒன்றினை அவர் தருவாரென எல்லோரும் எதிர்பார்த்தனர். இறுதியில் சிங்களத் தலைவர்கள் எல்லோரும் தமிழ் மக்களை வேண்டியளவிற்கு ஏமாற்றியிருக்கின்றனர்.

இப்போதுள்ள ஜனாதிபதிகூட அதையே செய்திருக்கின்றார். உள்நாட்டு ரீதியாக இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிகள் அனைத்தும் அடைபட்டுப்போயுள்ளன.

ஆகவே சர்வதேச ரீதியாகவே இந்த இனப்பிரச்சினை தொடர்பான விடயத்தை கொண்டு செல்லவேண்டியுள்ளது. நல்லாட்சியின் தலைவர் என சொல்லப்பட்ட ஜனாதிபதி அவர்கள் கட்சி இலாபத்திற்காக சுயலாபத்திற்காக நாடாளுமன்றத்தை திடீரென கலைத்து ஜனநாயகத்தின் மீது அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளார்.

இதன் விளைவுகள் பாரதூரமாக இருக்கப்போகின்றது. பல நாடுகள் இதனைக்கண்டித்துள்ளது. நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்பட்டு பெரும்பான்மையினை நிரூபிப்பவர்கள் பிரதமராக வரும் வாய்ப்பு இருக்கின்றது. எது நடைபெறவேண்டும் என்பதை எதிர்காலம் தீர்மானிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.